டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை எதிர்த்து கேவியட் மனுவை பாமக தாக்கல் செய்துள்ளது.

 

கொரானா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், 43 நாட்கள் கழித்து கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டன. எனினும், பல இடங்களில் கொரானா தொடர்பான விழிப்புணர்வு இன்றி, தனி மனித இடைவெளியை பின்பற்றாமால் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக நின்று மதுபானங்களை வாங்கிச்சென்றனர். இதையடுத்து, நீதிமன்றத்தின் நிபந்தனைகள் பின்பற்றப்படாததால், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் மூலம் மட்டும மதுபானங்களை விற்க அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. டாஸ்மாக் கடைகளில் காலதுறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதால், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.  மாநில எல்லைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தங்கள் தரப்பு கருத்தை கேட்டறிந்தபின்பே இந்த வழக்கில் முடிவெடுக்க வேண்டும் என பாமக மற்றும் சில அமைப்புகள் சார்பில் கேவியட் மனு டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இது தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டுக்கு முட்டுக்கட்டையாக அமையும் எனக் கருதப்படுகிறது.