இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வராததால் மே 3ம் தேதி வரை அமலில் இருந்த ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய ஊரடங்கை போல இல்லாமல் சில தளர்வுகளை செய்துகொள்ள உள்துறை அமைச்சகம் அனுமதித்திருந்தது. 

இதையடுத்து மாநிலங்கள் தங்கள் வசதிக்கேற்பவும் தேவைக்கேற்பவும் பொருளாதாரத்தை கருத்தில்கொண்டும் சில தளர்வுகள் செய்யப்பட்டன. 

மத்திய அரசு, ஒயின் ஷாப்புகளை திறந்துகொள்ளவும் அனுமதியளித்திருந்தது. 6 அடி இடைவெளி, ஒரு சமயத்தில் 5 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் ஒயின் ஷாப்புகள் திறக்கப்பட்ட போதிலும் தமிழ்நாட்டில் டாஸ்மாக் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மே 7ம் தேதியிலிருந்து டாஸ்மாக்கை திறக்கலாம் என தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக இல்லாத பகுதிகளில் திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக்கை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா ஆகிய எல்லை பகுதிகளில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று மதுபானங்கள் வாங்கும் நிலை இருந்தது. எனவே அதை தடுக்கும் விதமாக 7ம் தேதி முதல் டாஸ்மாக்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது,