கொரோனாவை தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு முந்தைய 21 நாட்கள் ஊரடங்கை போல இல்லாமல் சில தளர்வுகளை செய்துகொள்ள அனுமதியளித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதுகுறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க அறிவுறுத்தியது. 

கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதால், டெல்லி, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் எந்தவிதமான தளர்வுகளை செய்யவும் தயாராக இல்லை. ஊரடங்கு முன்பைப்போலவே தொடரும் என தெரிவித்துவிட்டன.

தமிழ்நாட்டில் இதுகுறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க, வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. இன்று முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டு தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலைய்ல், தமிழக அரசு தளர்வுகள் குறித்த அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பகுதியினர் மட்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து பணி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல 33% ஊழியர்களுடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சூளை பணிகள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள் கட்டுமான பணிகளும் செயல்படலாம் என அரசு தெரிவித்துள்ளது.