கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியளித்ததையடுத்து தமிழ்நாட்டில் மே 7ம் தேதி சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் செயல்பாட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. 

அந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உறுதி செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்தது தமிழக அரசு. டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க வருவோர் அடையாள அட்டையுடன் வர வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளியை உறுதிப்படுத்துவதற்காக வயது வாரியாக நேரம் ஒதுக்கியது தமிழக அரசு. எதிர்க்கட்சிகள் மற்றும் தாய்மார்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடைகளை திறப்பதில் உறுதியாக இருந்த அரசு, வருவாய்க்காகத்தான் டாஸ்மாக் கடைகளை திறக்கிறோம் என்று ஒப்புக்கொள்ளவேயில்லை.

அண்டை மாநிலங்களுடன் எல்லையை பகிரும் தமிழக மாவட்டங்களில் இருந்து, அண்டை மாநிலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று தமிழக மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்குவதாகவும் அதை தவிர்ப்பதற்காகவும் கள்ளச்சாராயங்களை தடுப்பதற்காகவும் தான் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் ஆட்சியாளர்கள் விளக்கமளித்துவந்தனர். 

இந்நிலையில், தமிழக அரசு வருவாய்க்காகத்தான் டாஸ்மாக் கடைகளை திறந்தது என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இது அனைவரும் அறிந்த விஷயம் தான் என்றாலும், அதை ஒப்புக்கொள்ளாமல் இருந்த அரசு, தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. 

40 நாட்கள் கழித்து மதுபானம் அருந்துவதில் ஆர்வமாக இருந்த மதுப்பிரியர்கள் தனிமனித இடைவெளி என்ற கட்டுப்பாடுகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு மே 7 மற்றும் 8ம் தேதிகளில் மிகவும் நெருக்கமாக நின்று மதுபானங்களை வாங்கினர். இதையடுத்து அந்த புகைப்பட ஆதாரங்களுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி வழக்குகள் தொடரப்பட்டன. 

அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்பது உறுதியானதால், டாஸ்மாக் கடைகளை இன்றிலிருந்து ஊரடங்கு முடியும் வரை மூடுமாறு நேற்று உத்தரவிட்டது. டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததால் கொரோனா வேகமாக அதிகமானோருக்கு பரவும் அபாயம் இருப்பதால் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. வேண்டுமானால் ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம், டாஸ்மாக் கடைகளை திறந்ததன் பிரதான நோக்கம் வருவாய் தான் என்பதை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்புவரை அதை ஆட்சியாளர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவேயில்லை. 

மேலும் அந்த மனுவில், நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால்,  முதல் நாள் அதிக கூட்டம் இருந்ததே தவிர, இரண்டாம் நாளில் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்றும் அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.