Asianet News TamilAsianet News Tamil

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தை கையில் எடுத்த மக்கள் நீதி மய்யம்.!

தமிழக மீனவர்கள் தொடர் கைது விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபரின் இந்திய வருகையின்போது முன்னுரிமை அடிப்படையில் விவாதிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

Tamil Nadu Fishermen Arrested: Sri Lankan President should end his visit to India says kamal haasan
Author
First Published Jul 10, 2023, 7:46 PM IST

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது இரு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்றுச் சென்று, ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ள இலங்கை ராணுவம், அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச்  சென்றுள்ளது.

கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை அவ்வப்போது கைது செய்வது, அவர்களது படகுகளை சிறைப்பிடிப்பது என இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்வது மிகவும்  கண்டனத்துக்குரியது. ஏற்கனவே மீன்பிடித் தடைக்காலம் காரணமாக கடலுக்குச் செல்ல முடியாமல், வருமானம் பாதிக்கப்பட்ட மீனவர்கள், தடைக்காலம் முடிந்து மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நிலையில், அவர்களை இலங்கை ராணுவம் தொடர்ந்து கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது.

16 இலட்சம் மதிப்பிலான காரை வாங்கிய பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா.. யார் வாங்கி கொடுத்தா தெரியுமா?

அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களது விசைப் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கின்றனர்.காலம்காலமாக மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்வோரையும் கைது செய்வது, தமிழக மீனவர்கள் மீதான திட்டமிட்டத் தாக்குதலாகும்.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று மத்திய அரசிடம் மக்கள் நீதி மய்யம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. இனியாவது இலங்கை அரசுக்கு, மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்து, தமிழக மீனவர்களின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்துள்ள விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, தனது அமைச்சர்கள் குழுவுடன் இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபரும், அமைச்சர்கள் குழுவும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து முன்னுரிமை அடிப்படையில் விவாதித்து, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !

Follow Us:
Download App:
  • android
  • ios