அதிமுக அணிகள், சுதந்திர தினத்துக்குள் ஒன்றிணையும் என்று தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும், டிடிவி.தினகரனுக்கு அதிமுகவில் பதவி கொடுத்ததே செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி.தினகரனுக்கு அதிமுகவில் எந்த அதிகாரமும் இல்லை என தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மேலும், அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தினர். 

இதையடுத்து, அமைச்சர்கள் கூட்டம் நடத்தி, சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை கட்சியிலும், ஆட்சியிலும் இருந்து விலக்கி வைப்பதாக அறிவித்தனர்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பினர் மீண்டும் வற்புறுத்தினர். இதனால், இரு அணிகளும் இணைவதில் பெரும் சிக்கல் இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால், இரு அணிகளும் இணையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர தினத்துக்குள் அதிமுக அணிகள் ஒன்றிணையும் என்று கூறியுள்ளார்.