தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஏசியா நெட் கூறியபடியே தேர்வாகியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஒரு மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி எம்.பி.யாக உள்ளார். இதேபோல் அவரது மற்றொரு மகனான அசோக் சிகாமணி கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர். கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இருந்தாலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக இருந்து வந்த அவர் அதன் நிர்வாகப்பதவிக்கு வர வேண்டும் என்று தீவிரம் காட்டி வந்தார். அதன்படி அண்மையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பதவியில் இருந்த பலரும் மீண்டும் அந்த பதவியில் தொடர விரும்பவில்லை.

இதனால் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அசோக் சிகாமணி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகும் முயற்சியில் இறங்கினார். ஆனால் பிசிசிஐ முன்னாள் தலைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளருமான சீனிவாசன் தனது மகளை தலைவராக்கிவிட்டார்.

இருந்தாலும் கூட தனது முயற்சியை விடாத அசோக் சிகாமணி போட்டியின்றி துணைத் தலைவர் ஆகியுள்ளார். வழக்கமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகளாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களே இருப்பார்கள். முக்கிய பதவிகளில் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் அசோக் சிகாமணி இந்த தடைகளை உடைத்து துணைத் தலைவராகியுள்ளார். மேலும் அவருக்கு திமுக பின்பலமும் உதவியதாக கூறுகிறார்கள். அசோக் சிகாமணியின் தந்தை பொன்முடி திமுகவில் முக்கிய நிர்வாகியாக வலம் வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திலும் அவரின் ராஜியம் ஆரம்பமாகியிருக்கிறது என்கிறார்கள்.