தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் அதிரடியாக நீக்கப்பட்டு ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நீக்கப்பட்டதற்கான பகீர் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதன் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி தொகுதிப் பங்கீடு பற்றிய 
பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமையை ராகுல் காந்தி மாற்றியமைத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டாலும், இந்த முடிவை தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே எதிர்பார்த்தே காத்திருந்தனர். 

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்தே அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன. காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இல்லாத ஒருவரை எப்படித் தலைவராக ஏற்க முடியும் என்று எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. அதற்கு நாங்களும் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று சு.திருநாவுக்கரசர் விளக்க அளித்து அனைவரையும் சமாளிக்கப் பார்த்தாலும், அவரால் கடைசிவரை அதைக் காப்பாற்ற முடியவில்லை. 

எம்ஜிஆர் மறைவையடுத்து அதிமுகவிலிருந்து பிரிந்து தனிக் கட்சியை தொடங்கினார். பிறகு அதை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தார். ஆனாலும் அதிமுக  அனுதாபி என்பதை அவருடைய பேட்டிகளே காட்டிக் கொடுத்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு திருநாவுக்கரசர் அளித்த பேட்டிகளில் எல்லாம், இந்நேரம் அதிமுகவில் நான் இருந்திருந்தால் முதல்வராக ஆகியிருப்பேன் என்று வெளிப்படையாகவே கூறினார். அவரது பேச்சு காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

ஏற்கனவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், திருநாவுக்கரசர் எழாம் பொருத்தம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் திருநாவுக்கரசர் காங்கிரஸில் இருக்கிறாரா, அதிமுகவில் இருக்கிறாரா' என்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், காங்கிரஸ் தலைமைக்கு புகார் தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சியைக் கடுமையாக சாடாத வகையிலேயே இருந்து வந்தன. இதனால் திருநாவுக்கரசரை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் ப.சிதம்பரம் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று திமுக தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் கட்சித் தலைமையை திருநாவுக்கரசர் வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.