தமிழக காங்கிரஸ் தலைவராக ப. சிதம்பரத்தை நியமிக்க மேலிடம் எடுத்த முயற்சிகள் கைகூடாததால், அவரது ஆதரவாளர் தலைவராக்கப்பட்டார் என்று டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

1980-களில் தொடங்கி தமிழக காங்கிரஸில் அசைக்க முடியாத, தவிர்க்க முடியாத தலைவராக இருப்பவர் ப. சிதம்பரம். நிதி, உள்துறை என முக்கியமான அமைச்சரவையை அலங்கரித்துள்ள இவருக்கு இதுவரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மட்டும் ஏன் தரப்படவில்லை என்ற கேள்வி எழுவது வாடிக்கை. பல்வேறு காலகட்டங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி காலியானபோது அவரது பெயர் அந்தப் பதவிக்கு அடிப்படும். ஆனால், வேறு ஒருவர் பதவியில் அமர்த்தப்படுவார். 

சமீப காலமாக திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கோஷ்டிகள் டெல்லியில் முகாமிட்டபோது, காங்கிரஸ் மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அவரை தலைவராக்கவும் காங்கிரஸ் கோஷ்டிகளில் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக, வாசன் கட்சியை விட்டு விலகியபோது, பீட்டர் அல்போன்ஸும் விலகினார். ஆனால், அடுத்த சில நாட்களில் மீண்டும் காங்கிரஸுக்கு பீட்டர் திரும்பினார்.  

இதை காங்கிரஸ் கோஷ்டிகள் பெரிய அளவில் போட்டுக்கொடுத்தே அவருக்குப் பதவி கிடைக்காமல் பார்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வேறு ஒருவரை தலைவராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தபோது, ப.சிதம்பரமே  தலைமையின் சாய்ஸாக இருந்திருக்கிறது. ஆனால், ப. சிதம்பரம் தலைவராவதில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த காலங்களைப்போல இப்போதும் ப. சிதம்பரம் தேசிய அளவில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருவதால் மாநிலத் தலைவர் பதவியை அவர் விரும்பவில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

மேலும் ப.சிதம்பரத்துக்கு எதிராகவும் கோஷ்டிகள் புறப்படும் என்பதால், அதில் சிக்கிக்கொள்ள ப.சிதம்பரம் ஆர்வம் காட்டவில்லை. தனக்கு தலைவராக ஆர்வம் இல்லை என்று ப.சிதம்பரம் தலைமையிடம் கூறினாலும், அந்தப் பதவிக்கு தன்னுடைய தீவிர ஆதரவாளரான கே.எஸ். அழகிரிக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் காங்கிரஸார். வாசன் காங்கிரஸில் இருந்தபோது, தனது ஆதரவாளரான ஞானதேசிகனுக்கு தலைவர் பதவியை வாங்கிக் கொடுத்ததுபோல, இந்த முறை ப.சிதம்பரம் தனது ஆதரவாளருக்கு தலைவர் பதவியை வாங்கிக்கொடுத்திருக்கிறார். கோஷ்டிகள் நிறைந்துள்ள காங்கிரஸில், தங்களுக்குப் பதிலாக தங்களது ஆதரவாளரை தலைவராக்கும் உத்தி தற்போது காங்கிரஸில் பரவத்தொடங்கியிருக்கிறது.