சுற்றுலா சார்ந்த தொழில்களில்‌ ஈடுபடும் தொழிலாளர்களை கணக்கெடுத்து, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்‌ நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசின் அனைத்து வகையான நலத்திட்டங்களையும்‌ பெற வழிவகை செய்யப்படும்‌ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.    

நீலகிரி மாவட்ட உதகையில்‌ நடைபெற்ற “உதகை 200” துவக்க விழா மற்றும்‌ அரசு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கும்‌ விழாவில்‌ கலந்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினர்.அப்போது பேசிய அவர், ”மாநிலம்‌ முழுவதும்‌ இருக்கக்கூடிய வனப்பரப்பைப்‌ பெருக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதாவது தற்போது இருக்கும்‌ வனப்பரப்பை 20.27 விழுக்காட்டிலிருந்து, 33 விழுக்காடாக உயர்த்த, நீண்டகால நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும். முதுமலையில்‌ இருக்கக்கூடிய புலிகள்‌ காப்பகத்தில்‌ இருக்கின்ற தெப்பக்காடு யானைகள்‌ முகாமில்‌, அதிநவீன யானைகள்‌ பாதுகாப்பு மையம்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ சுற்றுலா வளாகம்‌ ஒன்று ஏற்படுத்தப்படும்‌. 

நமது காட்டு வளங்களை மீட்டுருவாக்கம்‌ செய்யும்‌ பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு அந்நிய களைத்தாவரங்களை அழித்தாக வேண்டும்‌. இது உள்ளூர்த்‌ தாவர இனங்களின்‌ வளர்ச்சியை மட்டுப்படுத்துவதோடு, மாநிலத்தின்‌ பல்லுயிர்ப்‌ பன்மைக்குப்‌ பெரும்‌ அச்சுறுத்தலாக இருக்கிறது. அந்நிய களைத்‌ தாவரங்களை அகற்ற இந்த அரசால்‌ ரூபாய்‌ 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான பணிகள்‌ தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன்‌ மூலம்‌ நமது வனப்பகுதிகளின்‌ தன்மை முறையாக பராமரிக்கப்படும்‌ என்று உறுதியளிக்கிறேன்‌.

நீலகிரி மாவட்டத்தின்‌ பொருளாதார மேம்பாட்டிற்கு உள்ளூர்‌ உழவர்களுக்கு உதவும்‌ வகையில்‌ அவர்கள்‌ விளைவிக்கும்‌ பொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மையம்‌ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மையம்‌, மாவட்டத்தில்‌ உள்ள இலட்சக்கணக்கான உள்ளூர்‌ உழவர்கள்‌ உற்பத்தி செய்யும்‌ பழவகைகள்‌, காய்கறிகள்‌, தேயிலை, காபி, நறுமணப்‌ பொருட்கள்‌, பூக்கள்‌ மற்றும்‌ உற்பத்திப்‌ பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும்‌. 

இந்த மையத்தில்‌ வல்லுநர்களின்‌ வழிகாட்டுதலின்படி சிறந்த தொழில்நுட்பத்தைப்‌ பயன்படுத்தி உழவர்கள்‌ இயற்கை வேளாண்மை செய்ய ஊக்குவிக்கும்‌ வகையில்‌ ஆங்காங்கே வள மையம்‌ ஒன்றும்‌ அமைக்கப்படும்‌. சுற்றுலாப்‌ பயணிகள்‌ அதிகம்‌ வந்து செல்லும்‌ இந்த மாவட்டத்தில்‌, பெரும்‌ எண்ணிக்கையிலான மக்கள்‌ சுற்றுலா சார்ந்த தொழில்களில்‌ அவர்கள்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌. அவர்களுக்கெல்லாம்‌ அடையாள அட்டைகள்‌ வழங்கி தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்‌ நல வாரிய உறுப்பினர்களாகச்‌ சேர்த்து, அந்த வாரியத்தின்‌ அனைத்து வகையான நலத்திட்டங்களையும்‌ பெற வழிவகை செய்யப்படும்‌.

இந்தப்‌ பகுதி மக்களின்‌ முக்கியமான கோரிக்கைகளில்‌ ஒன்று - 17ஏ என்று சொல்லப்படும்‌ பிரிவு வகை நிலங்களில்‌ வீடுகட்டி குடியிருப்பவர்களுடைய பிரச்சனைகள்‌. இதுபற்றி அமைச்சர்கள்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ ஆகியோரைக்‌ கொண்ட ஒரு கலந்தாலோசனைக்‌ கூட்டத்தை நடத்தி நிச்சயம்‌ இதற்கு தீர்வு காண ஒரு முடிவுகள்‌ தர உறுதி எடுத்திருக்றோம்‌.

நீலகிரி மாவட்டத்தைப்‌ பாதுகாப்பது என்பது தமிழகத்தின்‌ இயற்கையைப்‌ பாதுகாப்பது சமம்‌. மலைகளும்‌, மலைகள்‌ சார்ந்த இடங்களும்‌ கொண்ட நீலகிரியின்‌ நிலத்தை இந்த அரசு காக்கும். மலைகளோடு சேர்ந்து இந்த மக்களையும்‌ இந்த அரசு நிச்சயம்‌ காக்கும்‌. வளர்ச்சி என்பது அனைத்து உயிர்களையும்‌ உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும்‌ "வாடிய பயிரைக்‌ கண்டபோதெல்லாம்‌ வாடினேன்‌" என்று சொன்ன வள்ளலாரின்‌ அறநெறியை ஆட்சி நெறியாகக்‌ கொண்டிருக்கக்கூடிய இந்த அரசு, "திராவிட மாடல்‌" என்று நான்‌ சொல்வதற்குள்‌ அனைத்து மானுடத்‌ தத்துவங்களும்‌ இதில்‌ அடங்கியிருக்கிறது. "சுயமரியாதைக்காரன்‌ என்றால்‌ அவனுக்கு இயற்கை மனிதன்‌ என்று பொருள்‌" இதைச்‌ சொன்னவர்‌ தந்‌தை பெரியார்‌ என்று முதலமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க: திமுகவினர் தொடர் அராஜகம்.. மன உளைச்சலில் காவல்துறையினர் .. போட்டு பொளக்கும் ஓபிஎஸ்..