பேரவையிலே சிறந்த முறையில் உழைத்த காரணத்தினாலே நாங்கள் உயர்வில் இருக்கிறோம். அதேபோல, நீங்களும் தன்னலமற்று சேவை புரிந்தால் உயர்ந்த இடத்துக்கு எதிர்காலத்தில் வருவீர்கள் என்று முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவை செயலாளரும் அமைச்சருமான உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது ஹைலைட்டானது. “ஜெயலலிதா தனக்கிருந்த நோயைப் பற்றி கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய பிறந்த நாளை எழுச்சியோடு நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள், பால், பிரட் ஆகியவற்றை வழங்கலாம். இதேபோல அரசு மருத்துவமனைக்கு தேவையான உதவிகளையும் செய்யலாம். இதுவே நாம் அனைவரும் ஜெயலலிதாவுக்கு செய்யும் நன்றி.
இன்று நாம் தலை நிமிர்த்து நிற்கிறோம் என்றால், அதற்கு ஜெயலலிதாவின் உழைப்புதான் காரணம். இந்த நேரத்தில் அரசு திட்டங்களைப் பற்றியெல்லாம் நாம் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். கட்சிக்கு இதயம் போன்று இருக்கும் பேரவை நிர்வாகிகள் தன்னலமற்று சேவையாற்ற வேண்டும். 1985-ம் ஆண்டில் பேரவையில் இருந்தவன் என்ற முறையிலே இதை நான் சொல்கிறேன். பேரவையிலே சிறந்த முறையில் உழைத்த காரணத்தினாலே நாங்கள் உயர்வில் இருக்கிறோம். அதேபோல, நீங்களும் தன்னலமற்று சேவை புரிந்தால் உயர்ந்த இடத்துக்கு எதிர்காலத்தில் வருவீர்கள்.” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.