இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 1008 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ள நிலையில், 7797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. குஜராத்தில் 3774 பேரும் டெல்லியில் 3314 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாதிப்பு தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்த பாதிப்பு கடந்த 2 நாட்களாக மீண்டும் தினமும் 100ஐ கடந்துள்ளது. அதற்கு காரணம் சென்னை. சென்னையில் நேற்று 103 பேரும் இன்று 94 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தேசியளவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் தான் வேறு மாநிலத்திலும் இல்லாதளவிற்கு 1210 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் தான் உள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டாலும், மற்ற மாநில அரசுகளின் தடுப்பு பணிகள் மற்றும் செயல்பாடுகளை கேட்டறிந்து அதிலிருந்து சிறந்த ஐடியாக்களை எடுத்து செயல்படுத்துவது நல்லதுதான். 

அந்தவகையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் நாளை ஆலோசிக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. அப்போது, இரு மாநில முதல்வர்களும் தங்களது மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகள் குறித்து பரஸ்பரம் கருத்துகளை பரிமாறிக்கொள்ள உள்ளனர்.