2018-19 ஆண்டுக்கான பட்ஜெட்டை துயை முதலமைச்சர் ஓபிஎஸ் தமிழக சட்டப பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அந்த கூட்டத்தொடர் ஜனவரி 12-ந் தேதி வரை நீடித்தது.

அதைத் தொடர்ந்து சட்டசபையில் கடந்த பிப்ரவரி 12-ந் தேதியன்று, மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவின் படம் திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் படத்தை சபாநாயகர் தனபால் திறந்துவைத்தார்.

இந்த நிலையில், பட்ஜெட் குறித்த அறிவிப்பை சட்டசபை செயலாளர் சீனிவாசன் கடந்த 7-ந் தேதியன்று வெளியிட்டார். அதில், சட்டப் பேரவையின்  அடுத்த கூட்டம் இன்று காலை காலை 10.30 மணிக்கு  கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று  2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் .

இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கம் ஆகியவை குறித்த அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரி உயர்வு இருக்குமா? அல்லது வரியில்லாத பட்ஜெட்டாக இருக்குமா? என்றும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பட்ஜெட் உரையை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்து முடிந்ததும் அன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டத்தில், சட்டசபை எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும்?, பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் நடத்தும் விவாதம் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும்? அந்த விவாதத்துக்கு நிதித்துறை அமைச்சர் என்றைக்கு பதிலளிக்க வேண்டும்?, துறை ரீதியான மானிய கோரிக்கைகள் எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட வேண்டும்? ஆகியவை உள்பட பல்வேறு அலுவல்கள் பற்றி முடிவு செய்யப்படும்.

மேலும் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான சிறப்பு அமர்வை சட்டசபையில் நடத்த தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.