Asianet News TamilAsianet News Tamil

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழக பாஜக நடப்பதா..? எல்.முருகன் மீது பாய்ந்த கே.எஸ்.அழகிரி..!

தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்படுகிற கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் குரல் கொடுப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்காகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
 

Tamil Nadu BJP support of the Karnataka government in the Cauvery affair? KS Alagiri attacked L. Murugan ..!
Author
Chennai, First Published Jul 5, 2021, 9:25 PM IST

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகாலமாகத் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பைப் பெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
அந்தச் சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், 'காவிரி நீரைப் பொறுத்தமட்டில் அதனை வீணாக்குவது என்பது தமிழகம்தான். இதில், நீர் பங்கீட்டை கர்நாடகா சரியாகத்தான் வழங்குகிறது. கடந்த 2 வருடங்களாகத் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர், வீணாகக் கடலில் கலந்து வருகிறது. குறிப்பாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வந்தபிறகு, முறையாகத் தமிழகத்திற்குத் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் கிடைத்து வருகிறது' என்று ஆதாரமற்ற கருத்தை, முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிற வகையில் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.Tamil Nadu BJP support of the Karnataka government in the Cauvery affair? KS Alagiri attacked L. Murugan ..!
காவிரி பிரச்சினையைப் பொறுத்தவரை பிப்ரவரி 2018இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஒவ்வோர் ஆண்டும் 177.25 டிஎம்சி தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், அந்த நீரை உறுதியாகப் பெறமுடியாத நிச்சயமற்ற நிலையில்தான் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தீர்ப்பின் அடிப்படையில் மாதாமாதம் வழங்க வேண்டிய நீரைக் கர்நாடக அரசு வழங்குவதில்லை. எப்போதுமே தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை எதிர்பார்த்து செப்டம்பர் வரை நிலைமையை ஆய்வு செய்த பிறகு தமிழகத்திற்குக் கர்நாடகம் நீரை வழங்கி வருகிறது.
அதேபோல, ஒவ்வோர் ஆண்டிலும் பற்றாக்குறை மாதங்களாகக் கருதப்படுகிற ஜூன், ஜூலையில் தமிழகத்திற்கு கர்நாடகம் தரவேண்டிய நீரின் அளவு 40.43 டிஎம்சி. ஆனால், கர்நாடகம் வழங்கியதோ, 2019 - 20இல் 9.5 டிஎம்சி. 2020- 21இல் 17.5 டிஎம்சி. பற்றாக்குறை மாதங்களில் தரவேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் எப்போதும் வழங்குவதில்லை. ஆனால், அதே நேரத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்கிற காலங்களில் குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கர்நாடகா அணைகளில் உபரியாக நீர் இருப்பதால் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலையில், அதிக அளவில் தண்ணீரைக் காவிரியில் திறந்து விடுகிறது. இதை ஒட்டுமொத்தக் கணக்கில் கர்நாடகம் சேர்த்துவிடுகிறது.

Tamil Nadu BJP support of the Karnataka government in the Cauvery affair? KS Alagiri attacked L. Murugan ..!
பற்றாக்குறை காலங்களான ஜூன், ஜூலை மாதங்களில் தரவேண்டிய தண்ணீரைத் தராமல் கடுமையான மழைப்பொழிவு இருக்கிற காலங்களில் தண்ணீரைத் திறந்துவிட்டுத் தமிழகத்தை வடிகாலாகக் கர்நாடக அரசு கருதுவதை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்குக் கீழே மேகதாதுவில் ரூ.6,000 கோடி செலவில் 70 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கிற அளவுக்கு அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அனுமதி கோரியிருக்கிறது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால் காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாறுவதற்கு வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன். காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த விதமான கட்டுமானப் பணிகளையும் எந்த மாநில அரசும் மேற்கொள்ள உரிமை இல்லை. இந்தச் சூழலில், மேகதாதுவில் அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு சமர்ப்பித்த உடனே அதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்திருக்க வேண்டும். இந்நிலையில், தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்படுகிற கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் குரல் கொடுப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்காகும்.

Tamil Nadu BJP support of the Karnataka government in the Cauvery affair? KS Alagiri attacked L. Murugan ..!
கர்நாடகம் வழங்குகிற காவிரி நீர் தமிழகத்தில் வீணடிக்கப்படுவதாக முருகன் கூறுகிறார். தமிழகத்தில் காவிரி நீர் வீணடிக்கப்படுவது திமுக ஆட்சிக்கு வந்த அறுபது நாட்களில் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில், ஜூன் 12ஆம் தேதி காவிரி நீர் திறந்து சமீபத்தில்தான் கடைமடையை அடைந்திருக்கிறது. பாஜக தலைவர் கூறுகிற குற்றச்சாட்டு அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சிக்குப் பொருந்துமே தவிர, 60 நாள்கூட நிறைவு பெறாத திமுக ஆட்சிக்குப் பொருந்தாது. இத்தகைய குற்றச்சாட்டை தமிழக பாஜக தலைவர் கூறுவதுதான் மிகவும் விந்தையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. இதைவிட பச்சை துரோகத்தை தமிழகத்திற்கு பாஜக செய்துவிட முடியாது.
எனவே, தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தரவேண்டிய தண்ணீரை வழங்குவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்நிலையில், காவிரி படுகை விவசாயிகளின் நலனுக்கு விரோதமாகக் கருத்துகளைக் கூறியிருக்கிற தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு விரோதமாகக் கூறப்பட்ட கருத்துகளை அவர் திரும்பப் பெறவில்லை எனில், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்" என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios