வரும் தேர்தல்களில் போட்டியிட்டு பாஜகவினர் வெற்றி பெற்று சட்டப்பேரவை,  நாடாளுமன்றத்துக்கு செல்வார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு எல். முருகன் முதன் முறையாக கோவை நகருக்கு வருகை புரிந்தார். அவரை கோவை விமான நிலையத்தில் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் வரவேற்றனர். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


“தமிழகத்திலிருந்து ஏற்கனவே பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இருந்துள்ளனர். வரும் தேர்தல்களிலும் இதேபோல போட்டியிட்டு பாஜகவினர் வெற்றி பெற்று சட்டப்பேரவை,  நாடாளுமன்றத்துக்கு செல்வார்கள். அதை நோக்கியே எனது பணி இருக்கும். நாங்கள் கட்சியை வளர்க்க தொய்வின்றி சிறப்பாக பணி செய்கிறோம். பாஜக சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், “கோவையில் இந்து இயக்கங்களைச் சேர்ந்த ஆனந்த், சூரிய பிரகாஷ் ஆகியோர் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஒரு சிலர் மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவில்லை. கோவையில் அமைதி நிலவ வேண்டும். இதைத் தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.