ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் (2020) முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. வற்புறுத்தி வருகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளது. எனவே இந்த பிரச்சினைகளை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபையில் கிளப்பும் என்று தெரிகிறது.

கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இதற்காக, அவர் காலை 9.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இருந்து காரில் புறப்படுகிறார்.

தலைமைச்செயலக வளாகத்திற்கு காலை 9.50 மணிக்கு வந்து சேரும் அவரை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். பின்னர், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப் படுகிறது. காலை 9.55 மணிக்கு சட்டசபை கூட்ட அரங்கிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை அழைத்து வருகிறார்கள்.

சபாநாயகர் இருக்கைக்கு வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவிப்பார். அப்போது, அனைவரும் எழுந்து நின்று அவருக்கு பதில் வணக்கம் செலுத்துவார்கள். கவர்னர் இருக்கைக்கு வலது புறத்தில் போடப்பட்டு இருக்கும் மற்றொரு இருக்கையில் சபாநாயகர் ப.தனபால் அமர்ந்திருப்பார்.

சரியாக, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித், அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்குவார். 

அவரது உரை ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று தெரிகிறது. அதில், மக்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததும், அவரது உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். இதுவும் ஒரு மணி நேரம் நீடிக்கும். அத்துடன், முதல் நாள் கூட்டம் நிறைவடையும். அனைவரிடமும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் விடைபெற்றுச் செல்வார்.

அதன்பிறகு, இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.