கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான கூட்டமே முழுமையாக நடைபெறவில்லை. கடைசி கட்டத்தில் அவசர அவசரமாக பட்ஜெட் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. அரசியல் அமைப்பு சட்டப்படி ஆறு மாதத்துக்கு ஒரு முறை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடத்தியாக வேண்டும். அதன்படி செப்டம்பர் 24ம் தேதிக்குள் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் நடத்த வேண்டும். 
ஆனால், சென்னையில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மேலும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள சட்டப்பேரவைக் கட்டிடத்தில் இடநெருக்கடி உள்ளது. தற்போதைய சூழலில் அந்தக் கட்டிடத்தில் சமூக இடைவெளியுடன் எம்.எல்.ஏ.க்களை அமர வைத்து  சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, வேறு ஏதாவது இடத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சபாநாயகர் ப.தனபால் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தைக் கடந்த சனிக்கிழமை பார்வையிட்டார். அப்போது அந்த அரங்கத்தில் உள்ள மூன்றாவது தளத்தை ப. தனபால் ஆய்வு செய்தார். சட்டப்பேரவை கூட்டம் எங்கே நடைபெறும் என்பதை இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ப.சண்முகம், சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் இன்று மீண்டும் கலைவாணர் அரங்கத்தைப் பார்வையிட்டனர். மூன்றாவது தளத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் அடுத்த மாதம் சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.