அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது வரும் அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கடும் விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், சில மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் வேட்பாளரை இன்றே முடிவெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் 11  பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்த பின் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்கலாம் என்று கூறினர். ஆனால், வழிகாட்டுக் குழு அமைப்பதற்குப் பதிலாக கட்சியை நிர்வகிக்கக் குழு ஒன்றை அமைக்கலாம் எனவும் எடப்பாடி ஆதரவாளர்கள் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் சுமார் 5 மணிநேரம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி;- அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது வரும் அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும். இதை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.