முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 110 எம்.எல்.ஏ.க்களை வைத்து சட்டப்பேரவையில் கதிகலங்க வைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தைரியமாக நாக்கை துருத்தி, வேட்டியை மடித்து ஓய் என கூக்குரலிட்டு ஆள்காட்டி விரலை நீட்டி விஜயகாந்த் சட்டப்பேரவையில் பட்டையை கிளப்பியதற்கு காரணமே அவர் பின்னால் இருந்த 28 எம்.எல்.ஏ.க்கள் தான். ஆனால் அந்த 28 எம்.எல்.ஏ.க்களின் கூச்சலை விட ஜெயலலிதாவின் பின்னால் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் மிக சக்தி வாய்ந்ததாக இருந்ததது. ஜெயலலிதா எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது திமுக துரைமுருகனால் புடவை உருவப்பட்ட சம்பவத்தின் போதும், அதேபோன்று தாமரைக்கனி வீரபாண்டி ஆறுமுகத்தை ஓங்கி தாக்கிய போதும்தான் சட்டப்பேரவையின் எம்.எல்.ஏ பலம் என்ன என்பதை கட்சிகள் உணர்ந்தன. 

இந்நிலையில் தமிழகத்தில் 22 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது, சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம், சபாநாயகரையும் சேர்த்து 113-ஆக இருந்தது. அதிலும் அறந்தாங்கி, கள்ளக்குறிச்சி மற்றும் விருதாச்சலம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தினகரன் ஆதரவாளர்கள் என்பதால் சட்டப்பேரவையில், அதிமுகவின் பலம் 110-ஆக குறைந்திருந்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற கருணாஸ், தமீமுன் அன்சாரி தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறாமல் இருந்து வந்தனர்.

இதனால் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசை உறுதியாக ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 108-ஆக இருந்தது. அப்போதே 89 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்த திமுக, குட்கா விவகாரத்தின் போது அரசுக்கு எதிராக அரஜாகத்தில் ஈடுபட்டு சட்டப்பேரவை அதிரவைத்தனர்.  

தற்போது சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 122-ஆக உள்ளது. அதேபோல் இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் வென்றுள்ள திமுகவின் பலம் 110-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற ஜூன் மாதம் 2-வது வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு இணையான எம்.எல்.ஏ.க்களை வைத்து உள்ள எதிர்க்கட்சியான திமுக, முழு பலத்துடன் சட்டப்பேரவையில் குரலை உயர்த்தும் என்பதில் ஐயம் இல்லை. இதனால் ஜூன் மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவையில் 110 எம்.எல்.ஏ.க்களை வைத்து எடப்பாடி கதிலங்க வைக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். 110 எம்.எல்.ஏ.க்களுடன் அசுர பலத்துடன் சட்டப்பேரவையில் நுழைய உள்ள திமுகவினரை எடப்பாடி அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.