திடீரென சென்னையில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கத்தின் வீட்டில் வைத்து அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது தான் தற்போதைய தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.

பியூஸ் கோயலின் வருகை கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஆனால் திடிரென இந்த நிலைப்பாட்டை பியூஸ் கோயல் மாற்றியுள்ளார். தனது வருகை குறித்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அவர் கூற, உடனடியாக பா.ஜ.க பி.ஆர்.ஓ டீம் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசிவிட்டு புறப்பட்டார். 

அதன் பிறகு திடீரென மீண்டும் பா.ஜ.க பி.ஆர்.ஓ டீமிடம் இருந்து செய்தியாளர்களுக்கு அழைப்பு வந்தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டிற்கு வரவும், முக்கியமான நிகழ்வு என்று மட்டும் அவர்களின் செல்போன் குறுந்தகவல் இருந்தது. இதனை அடுத்து செய்தியாளர்கள் அனைவரும் அங்கு படையெடுத்தனர். அப்போது தான் சரியாக மின்சாரத்துறை அமைச்சரும் அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை குழு உறுப்பினருமான அமைச்சர் தங்கமணி வந்து சேர்ந்தார். மேலும் உள்ளே பியூஸ் கோயல் இருப்பதை பா.ஜ.க தரப்பு உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த தகவல் பிரேக்கிங் நியுஸ் ஆனது. 

இந்த பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்த வேண்டும் என்பது தான் அ.தி.மு.கவின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் ரகசியத்தை உடைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு பா.ஜ.க தரப்பு செயல்பட்டுள்ளது. பேச்சுவார்த்ததை எங்கு நடைபெறுகிறது? யார் யார் பங்கேற்றார்கள் என்கிற விவரத்தை விலாவாரியாக பா.ஜ.க தரப்பு செய்தியாளர்களுக்கு புட்டு புட்டு வைத்தது. இதற்கு காரணம் அ.தி.மு.க பேச்சுவார்த்தையில் நழுவி விடக்கூடாது என்பது தான் என்கிறார்கள். மேலும் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி உறுதி என்கிற தகவலை தமிழக மக்களிடம் எவ்வளவு சீக்கிரம் கொண்டு சென்று சேர்க்க வேண்டுமோ? அவ்வளவு சீக்கிரம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பா.ஜ.க கருதியுள்ளது. 

இதனை அடுத்தே ரகசிய சந்திப்பை அம்பலப்படுத்தி கூட்டணி பேச்சுவார்த்தையை கூட அரசியலாக்கியுள்ளது பா.ஜ.க சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் பியூஸ் கோயலும் – அமைச்சர் தங்கமணியும் தான் நேருக்கு நேராக அதிக முறை பேசியுள்ளனர். பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வப்போது அமைச்சர் தங்கமணி கூறிய தகவல்களை சற்று ஆழமாக பியூஸ் கோயலுக்கு விளக்கி கூறியுள்ளார். இதே போல் பா.ஜ.கவுடனான கூட்டணியால் அ.தி.மு.கவிற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று அமைச்சர் தங்கமணியிடம் பியூஸ் கோயல் பட்டியலிட்டுள்ளார்.

 

அவ்வப்போது எடப்பாடி – ஓ.பி.எஸ் செல்போன் மூலம் பியூஸ் கோயலிடம் பேசியுள்ளனர். 11 தொகுதிகள் வேண்டும் என்று பா.ஜ.க ஆரம்பித்த நிலையில் இறுதியில் 10 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளதாக சொல்கிறார்கள். அதே சமயம் 5 தொகுதிகளில் ஆரம்பித்த அ.தி.மு.க தரப்பு 7 தொகுதிகள் வரை தர முன்வந்ததாக சொல்கிறார்கள். கடைசியாக கடந்த 2004ம் ஆண்டு பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது.

 

அப்போது ஜெயலலிதா பா.ஜ.கவிற்கு 7 தொகுதிகளை கொடுத்திருந்தார். அதனை குறிப்பிட்டு தற்போதும் ஏழு தொகதிகள் என்று பா.ஜ.கவிற்கு அ.தி.மு.க  ஆசை காட்டியுள்ளது. ஆனால் 10 தொகுதிகள் வேண்டும் என்று பா.ஜ.க பிடிவாதம் காட்டியதால் பேச்சுவார்த்தை முழுமை அடையவில்லை. இதனிடையே டெல்லியில் வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் பியூஸ் கோயல் பங்கேற்க வேண்டியிருந்தது. எனவே பேச்சுவார்த்தை முற்று பெறாமலேயே பியூஸ் கோயல் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மீண்டும் அவர் சென்னை வரும் நிலையில் கூட்டணி இறுதியாகும் என்று சொல்கிறார்கள்.