தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்; தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட ஆவணங்களின் படி தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றில் கூட தமிழ்மொழி மொழிப் பாடமாக பயிற்றுவிக்கப்படவில்லை. ஆனால், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி கட்டாயம் எனவும் தெரியவந்துள்ளது. 

இந்தி மொழியைப் பயிற்றுவிக்க 109 ஆசிரியர்களும், சமஸ்கிருதத்தை பயிற்றுவிக்க 53 ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழ் ஆசிரியர் ஒருவர் கூட இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழை மொழிப்பாடமாக எடுத்து படிக்க விரும்பினாலும் படிக்க முடியாத சூழல் உள்ளது. ஆனால், வழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால்தான் 6 ஆம் வகுப்பிலிருந்து 7 ஆம் வகுப்பிற்கு செல்ல முடியும்.  தமிழ் மண்ணிலேயே தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவே இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ் மொழியை அவர்கள் கட்டாயம் ஆக்குவார்களா ?? என்ற கேள்விக்கு பதில் உண்டா. தமிழை காப்பதுபோல் நாடாகமாடும் மத்திய அரசு மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி முற்றிலுமாக புறக்கணிப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மேலும் இத்தகைய நடவடிக்கை மறைமுகமாக புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த நினைக்கிறார்கள் என்பதனை வெட்டவெளிச்சமாக்குகிறது. இதுபோன்று தொடர்ந்து தமிழகத்திற்கும், தமிழக மாணவர்களுக்கும், தமிழ் மொழிக்கும் எதிரான திட்டங்களை கொண்டு வரும் பாசிச மத்திய அரசின் நடவடிக்கைக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றது. 

எனவே, தமிழக அரசு உடனடியாக இது விஷயத்தில் தலையிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க உத்தரவிட்டு, தமிழ் ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை முற்றிலும் கைவிட வேண்டும் எனவும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் மத்திய அரசு தொடர்ந்து இதுபோன்ற இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை மேற்கொண்டால் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களை ஒன்று திரட்டி கேம்பஸ் ஃப்ரண்ட் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும் எனவும் எச்சரிக்கையுடன் கூறிக்கொள்கிறோம்.