தமிழ் ஆகம விதிகளின் படி, தமிழில் தான் தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும்  அர்ச்சனை நிகழ்த்தப்பட வேண்டும்,  இதனை வலியுறுத்தி பிப்ரவரி 1 ம் தேதி தஞ்சாவூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் தலைவர் பெ.மணியரசன் உயர் நீதி மன்ற மதுரை கிளை வளாகத்தில் பேட்டி. கொடுத்துள்ளார்.   தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் தலைவர், பெ.மணியரசன் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்துள்ளார். 

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் வரும் பிப்ரவரி 5ல் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவினை தமிழிலேயே நடத்த உத்தரவும் வேண்டும் என வழக்கு தொடுப்பதற்காக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்திருந்த  தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் தலைவர், பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய மன்னர் ராஜராஜ சோழன், பவண பிடாரன் என்னும் தமிழ் ஒதுவாரின் தலைமையில், 48 ஓதுவார்களை வைத்து தமிழில் அர்ச்சனையை துவக்கி வைத்துள்ளார்.  இதற்கான சான்றுகள் உள்ளன. இதன் பின் இடையில் வந்தவர்கள், சமஸ்கிருதத்தை புகுத்தி இங்கிருந்த தமிழை வெளியேற்றி விட்டனர். தமிழ் மரபில் தான் இங்கு அர்ச்சனைகளும், வழிபாடுகளும் நடந்துள்ளன என்பதை சுந்தர முர்த்தி நாயனார் தனது பாடல்களில், பதிவிட்டுள்ளார். 

2015ல் உச்ச நீதிமன்றத்தில், ரஞ்சன் கோகய் தலைமையிலான நீதிபதி இந்த மொழியில் தான் குறிப்பாக சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற எந்த விதமான பதிவுகளோ, ஆதாரமோ இல்லை என்று, உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர் பாண்டியராஜன், மற்றும் அதிகாரிகள் சம்ஸ்கிருதம், மற்றும் தமிழ் ஆகிய 2 மொழிகளிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே தமிழ் ஆகம விதிகளின் படி, தமிழில் தான் அர்ச்சனை நிகழ்த்தப்பட வேண்டும் . இதன் வலியுறுத்தி பிப். 1 ம் தேதி தஞ்சாவூரில் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்தார்.