சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது  நீரிழிவு நோய்க்கு மருந்தாக யோகாவைப் பிரபலப்படுத்த பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
 
மருத்துவ சேவையைப் பொறுத்தவரைத் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பள்ளிகளிலும் யோகா அறிமுகம் செய்யப்பட்டுச் சிறப்பாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு குறித்துப் பேசிய அமைச்சர், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு ஏரிகளைக் குடிநீர் ஏரியாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

தமிழகத்தில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தின் 210ஆவது பக்கத்தில், மொழிகள் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது. அதில், இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி மட்டுமே என  குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் மொழியை இந்தியா முழுவதும் ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்றும், வழக்காடு மொழியாக கொண்டுவர முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.