பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தேர்தலுக்கான லஞ்சம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலையும் இதுதொடர்பாக விமர்சித்திருந்தார். கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களிடம், “தமிழக அரசு 2000 ரூபாய் கொடுக்கின்றனர் என்பதற்காக 5 வருட வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள். 2000 ரூபாயை நம்பி அந்த பக்கம் போய்விடாதீர்கள்” என்று கூறியிருந்தார்.


அதிமுகவின் கூட்டணியில் இருந்துகொண்டே, அதிமுக அரசின் திட்டத்தை விமர்சித்தது பரபரப்பை கிளப்பியது. மேலும் அண்ணாமலையின் இந்தப் பேச்சு சமூக ஊடங்களிலும் கவனம் பெற்றது. இந்நிலையில் இதுதொடர்பாக அண்ணாமலை ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சில ஊடகங்கள், பொங்கலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாக, தவறாக சித்தரித்து கூற முயற்சிக்கிறார்கள், அதை பிரசுரமும் செய்கிறார்கள் .

பொங்கலுக்கு கொடுக்கும் தொகையை முதலமைச்சர் ரூபாய் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரத்து ஐநூறாக உயர்த்தி இருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். கொரோனா இருக்கும் இக்காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கும் இந்த பணம் மக்களுக்கு உதவியாக இருக்கும், அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களை குழப்பவும் பெரும் முயற்சி செய்கின்றன சில ஊடகங்கள். உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும். வாழ்க, வளர்க தமிழ்நாடு.” என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.