புதுவை கம்பன் கலையரங்கில் கடந்த 9-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது இந்து கோவில்களில் உள்ள அசிங்க, அசிங்கமான பொம்மைகளை வைத்துள்ளார்கள் என பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இந்து முன்னணியின் புதுவை மாநில செயலாளர் ரமேஷ் , ஓதியஞ்சாலை போலீசில் ஒரு புகார்  மனு அளித்துள்ளார். அந்த மனுவில், புதுச்சேரியில் பேசிய திருமாவளவன், இந்து கோவில்களை இழிவுபடுத்தும் நோக்கிலும், இந்துக்களை சிறுமைப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.

அவரின் இந்த பேச்சு மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. அவர் தொடர்ந்து இந்துக்களின் மத நம்பிக்கையையும், மத வழிபாடு சார்ந்த விஷயங்களையும் இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

எம்.பி.யாக உள்ள திருமாவளவன் அவர் பதவி பிரமாணத்துக்கு விரோதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசியுள்ளதால் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் .குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல நெட்டப்பாக்கம் கொம்யூன் இந்து முன்னணி செயலாளர் சிலம்பரசன் கரிக்கலாம்பாக்கம் போலீசில் திருமாவளவன் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.