2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற புதிதாக  டி20 பார்முலாவை பாஜக பயன்படுத்த உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை மீட்க  பாஜக தீவிர பிரச்சாரம் செய்தது. ஒரே நேரத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மோடியின் பிரச்சாரத்தை பார்க்கும் வகையில் 3டி தொழில்நுட்பத்தில் வசதிகள் செய்யப்பட்டன. பாஜகவினரின்  வித்தியாசமான பிரச்சார யுத்தியாலும், காங்கிரஸ்கட்சி மீது மக்களுக்கு இருந்த கோபம் காரணமாகவும், பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

 

இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்ற பாஜக தீவிரமாக திட்டம் வகுத்துச் செயல்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் முக்கியமான படிதான் டி20 பார்முலா ஆகும். வரும் மக்களவைத் தேர்தலில் இந்த டி20 பார்முலா வெற்றிக்கான முக்கிய கருவியாக இருக்கும் என்று பாஜக நம்புகிறது.  
 
இந்த டி20 கிரிக்கெட் பார்முலாவின்படி, ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்த இலக்கின்படி ஒரு தொண்டர் குறைந்தபட்சம் தங்கள் பகுதியில் உள்ள 20 வீடுகளுக்குச் சென்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் திட்டங்கள், சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும். அப்போது கேட்கும் மக்களுக்கு ஒரு கோப்பை தேநீர் அளித்து அவர்களுடன் உரையாட வேண்டும் என்பதுதான் டி20 திட்டமாகும். 
 
இந்த டி20 பார்முலா தவிர்த்து, ஒவ்வொரு பூத்திலும் 10 இளைஞர்கள் திட்டமும், நமோ ஆப்ஸ் செயல்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பாஜக எம்எல்ஏ, எம்.பி.க்கள், பூத் அளவில் பணியாற்றும் தொண்டர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாஜக அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. 

மேலும், பிரச்சாரத்துக்காகவே தனியாக ஆப்ஸ்(செயலி) ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.  பாஜக தொண்டர்களுக்கான அந்த ஆப்ஸில் அவர்கள் செய்ய வேண்டிய பணி, இலக்குகள் குறித்து அதில் தொகுதிவாரியாக குறிப்பிடப்பட்டு இருக்கும். தொண்டர்களுக்கான பணி, மக்களை அதிகமாகச் சேர்ப்பது எப்படி, மக்களுக்கு அரசின் சாதனைகளை எடுத்துக் கூறும் வகையில் வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை இந்த ஆப்ஸில் இருக்கும்.

 

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 100 வாக்காளர்களை நமோஆப்ஸில் சேர்க்க பாஜக திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்வதற்காக தனியாக 24 பேர் கொண்ட குழுவும் உருவாக்கப்படும். இந்தக் குழு மோடி அரசின் 5 ஆண்டு சாதனைகள், திட்டங்கள், அடுத்த ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன திட்டங்கள் செய்ய இருக்கிறது ஆகியவற்றை உண்மையான புள்ளிவிவரங்களுடன், படங்களுடன், வீடியோக்களுடன் மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.