ஆயுஷ் செயலாளர் நாடு மாறி, பல்வேறு மொழி இனத் தேசிய ஒன்றியமான இந்தியாவிற்குள் வந்து, இந்தியர்களைப் பார்த்தே, ஹிந்தி தெரியாதவர் வெளியேறுங்கள் என அதட்டுவதா? என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் டி. வேல்முருகன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று நாட்களுக்கு முன் டெல்லியில் தேசிய யோகா நேச்சுரோபதி மருத்துவர்களின் இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது. மூன்று நாள் கருத்தரங்கு அது. அதில் பேசிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே தன் உரையை ஹிந்தியில்தான் ஆற்றினார். அவரது இந்தி உரை புரியாத, தமிழ்நாட்டைச் சேர்ந்த யோகா மருத்துவர்கள், “ஐயா, பயிற்சி அளிப்பவர்கள் மூன்று நாட்களாக ஹிந்தியியில்தான் பேசுகிறார்கள். அது எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் எங்கள் மாநிலத்தில் பணி செய்யத் தேந்தெடுக்கப்பட்டு இந்தப் பயிற்சிக்காக வந்தவர்கள். பல மாநிலத்தவர் இருக்கிறோம். தாங்கள் ஆங்கிலத்தில் பேசினால் எங்களுக்கு நன்கு புரியுமே?” எனக் கேட்டிருக்கின்றனர்.


உடனே ஆயுஷ் அமைச்சகச் செயலர் ராஜேஷ் கோட்சே, “ஹிந்தியில்தான் பேசமுடியும்; புரியவில்லை என்றால் எழுந்து போ” என்று என அதட்டியிருக்கிறார். இது ஹிந்தி பேசாத மருத்துவர்கள், குறிப்பாக தென்னக மருத்துவர்கள், அதிலும் குறிப்பாக தமிழக மருத்துவர்கள் மீதான “ஹிந்தி”யர்களின் இயல்பான வெறுப்பு மற்றும் ஆதிக்கத்தின் வெளிப்பாடு அன்றி வேறல்ல. இது தவிர தமிழர்களுக்கு எதிரான வேறு விதமான வேண்டாத நடவடிக்கைகளும் அந்த ஆயுஷ் அமைச்சகத்தில் அரங்கேறுகின்றன. அதாவது, ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்த ஒரே ஒரு சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவியையும் இப்போது எடுத்துவிட்டார்கள்.
முந்தா நாள் அன்று (21.08.2020) சித்த மருந்துக் கட்டுப்பாடு இணை இயக்குநர் பதவிக்கு ஆயுர்வேத மருத்துவரை நியமித்திருக்கிறார்கள். அந்தப் பதவிக்கு எம்டி (சித்தா குணபாடம்) படித்த மருத்துவர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்கிறது நியமன விதிமுறை. ஆனால் விதியை மீறி ஆயுர்வேத மருத்துவரை நியமித்துள்ளார்கள். இந்தப் பதவி (பொறுப்பு) என்பது, இந்திய அளவிலான இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர் பதவியாகும். தமிழ்நாட்டில் இரு அரசுக் கல்லூரிகளிலும் தேசிய நிறுவனத்திலும் எம்டி குணபாடம் பயின்ற அனுபவம் வாய்ந்த எத்தனையோ சித்த மருத்துவர்கள் இருக்கும்போது; தான்தோன்றித்தனமாக, சர்வாதிகாரமாக, முறைகேடாக, தமிழ் சித்த வைத்தியத்தின் மீதான கொடும் வெறுப்பின் காரணமாக இப்படி தகாத முடிவை எடுக்கிறார்கள்.