இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிடப்பில் உள்ள சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டில் சேது சமுத்திர திட்டத்துக்கு மதுரையில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். சேது சமுத்திர கால்வாயை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவந்த வேளையில், இத்திட்டத்துக்காக ராமர் பாலம் இடிக்கப்படுவதை எதிர்த்து இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல பாஜகவும், அதிமுகவும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்தத் திட்டம்  தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

 
இந்நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று டி.ஆர். பாலு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “கடந்த 10 ஆண்டுகளில் சீனா இலங்கையில் கோடிக்கணக்கான முதலீட்டை செய்துள்ளது. அந்த நாட்டில் உள்கட்டமைப்பு, துறைமுகங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்துவருகிறது. இத்திடங்களுக்கான கடனை செலுத்த முடியாததால், இலங்கையின் முக்கிய துறைமுகமான அம்பன்தோட்டா துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தியிருக்கிறது. பாதுகாப்பு ரீதியில் இலங்கை மற்றொரு நேபாளமாக மாறக் கூடும் என்ற அச்சமும் உள்ளது.


எதிர்காலத்தில் இலங்கை மூலம் இந்திய பெருங்கடலில் தனது ஆளுகையை சீனா செலுத்த முயற்சிக்கலாம். எனவே 2005-ல் தொடங்கப்பட்டு கிடப்பில் உள்ள சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பை இந்திய  பெருங்கடலில் அது உறுதி செய்யும். இத்திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாராட்டி உள்ளார். எனவே, மற்ற காரணங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நாட்டின் பாதுகாப்பை மட்டும் மனதில் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என டி.ஆர். பாலு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.