S.Ve. Sekar condemned

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் அழிக்கத் தேவையில்லை என்றும் ஜோதி பிரகாசமா எரியுது; சீக்கிரமே... என்று முற்றுப்பெறாத வாசகத்தோடு பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் டுவிட் செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. 

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேசும், பாஜக சார்பில் கரு.நாகராஜனும் போட்டியிடுகின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட பலர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் வீட்டுக்கு மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சென்றபோது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், அதிமுக வெற்றி பெற எங்கள் வாக்கு வங்கியே போதுமானது என்றார். மேலும் பாஜக ஒரு பொருட்டே கிடையாது என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். அதில், எதற்கெடுத்தாலும் டெல்லிக்கு காவடி தூக்குற அதிமுக. ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ஒரு பொட்டே கிடையாது...! அதிமுகவை வெளியில் இருந்து யாரும் அழிக்க தேவையில்லை. இணையாத மனங்கள் இருக்கும்போதே இவ்வளவு பேச்சு அதிகம். ஜோதி பிரகாசமா எரியுது. சீக்கிரமே... என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பார்.