பணமோசடி வழக்கில் அமைச்சர் காமராஜுக்கு உச்சநீதி மன்றம் கொடுத்து வரும் நெருக்கடியால், அவர் எந்நேரமும் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பணமோசடி வழக்கு தொடர்பாக, அமைச்சர் காமராஜ் மீது இன்னும் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? அவர் என்ன சட்ட விதிகளுக்கு மேலானவரா? என்று உச்சநீதி மன்றம் மீண்டும் கிடுக்கி பிடி கேள்வி எழுப்பியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குமார் என்பவர், சென்னையில் உள்ள தமது வீட்டில் குடி இருந்தவர்களை காலி செய்து தருவதற்காக, அமைச்சர் காமராஜுக்கு கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்னர் 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், அமைச்சர் காமராஜ், வீட்டில் குடி இருந்தவர்களை காலி செய்து கொடுக்கவில்லை. அதற்காக வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்க வில்லை.

இது தொடர்பான வழக்கை கடந்த வாரம்  விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதி, அமைச்சர் காமராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறீர்களா அல்லது வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றட்டுமா? என எச்சரித்தார்.

அதன் பிறகும், அமைச்சர் காமராஜ் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில், அந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்சநீதி மன்றம்  உத்தரவிட்ட பின்னரும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை? புகார் தெரிவித்த பினனர் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? 

அமைச்சர் என்றால் சட்ட விதிகளுக்கு மேலானவரா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை வரும் 8 ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதனால், அமைச்சர் காமராஜ் மீது பணமோசடி புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது காவல் துறை.

அவ்வாறு, அமைச்சர் காமராஜ் மீது, காவல் துறையில் வழக்கு பதிவு செய்தால், அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டி வரும். இதனால், தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அங்கு அத்துமீறி நுழைந்து அதிகாரிகளை மிரட்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பணமோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டால், காமராஜ், அமைச்சர் பதவியை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை.

அமைச்சர் காமராஜ், சசிகலா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர என்பதால், முதல்வர் எடப்பாடி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவித்து வந்தார்.

ஆனால், உச்சநீதி மன்றமே கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அமைச்சர் காமராஜ் விரைவில், பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றே அதிமுகவினர் கூறுகின்றனர்.