டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்கமுடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், தேர்தலைக் கருத்தில் கொண்டு அமமுகவுக்கு பொதுச் சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

டிடிவி தினகரன் தரப்பில் வாதிடும்போது, ''குக்கர் சின்னத்தை ஒதுக்காவிட்டால், பொதுச்சின்னம் எதையாவது கொடுங்கள்'' என்றனர். ஆனால் தேர்தல் ஆணையம்,''அமமுகவை சுயேச்சையாகவே கருதுகிறோம். அதனால் தனிச் சின்னங்களைத்தான் வழங்கமுடியும். பொதுச்சின்னத்தை வழங்க சட்டத்தில் இடமில்லை'' என்று தெரிவித்தது.

எனினும் இதற்குப் பதிலளித்த  உச்ச நீதிமன்றம், ''குறுகிய காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டப்பேரவை இடைத் தேர்தலும் வர உள்ளன. ஒருவர் எத்தனை வலிமையாக இருந்தாலும் சின்னம்தான் அவரின் அடையாளம். அதனால் அமமுகவுக்கு பொதுச் சின்னத்தை வழங்குவது குறித்துப் பரிசீலியுங்கள்'' என்று அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அமமுகவுக்கு குக்கர் சின்னம் அல்லாத பொதுச்சின்னத்தை வழங்க உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டது.  சட்டத்தில் இடமில்லை என்று ஆணையம் கூறியபோதிலும் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுச்சின்னம் ஒதுக்கப்பட்டாலும் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகவே கருதப்படுவர் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

வேட்புமனு இன்று மூன்று மணிக்கு முடிவைடைய உள்ள நிலையில் அமமுக வேட்பாளர்கள் இன்று மதியம் 2-3 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய டி.டி.வி.தினகரன் அறிவுறுத்தி உள்ளார்.