supreme court ordered to form cauvery management board

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், 192 டிஎம்சி போதாது. எனவே கூடுதலாக 72 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், கான்வில்கர் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

இந்நிலையில், நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்ந்து வந்த காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது. எனவே தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தீர்ப்பளித்தது.

மேலும் தமிழ்நாடு அரசு கோரிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பலமுறை மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியம் காட்டிவருகிறது. இந்த முறையாவது நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமா? என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.