காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக மே மாதம் இறுதி வரை ஆய்வு செய்து ஜூலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி, இதுதொடர்பாக ஆய்வு செய்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், காவிரியில் கழிவுநீர் கலக்கப்படுவது உண்மைதான் எனவும், கழிவுகள் கலந்த காவிரி நீர்தான் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தது.

இதுதொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது, காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக மே மாதம் இறுதிவரை ஆய்வு செய்யுமாறு தமிழக அரசு, கர்நாடக அரசு மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஆய்வு செய்து அந்த அறிக்கையை ஜூலைக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.