supreme court denied semmalai request
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்குமாறு எம்.எல்.ஏ செம்மலை தொடர்ந்த வழக்கை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். கொறடாவின் உத்தரவை மீறி முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிடக்கோடி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக்கோரிய திமுகவின் வழக்கு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு, குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீஸை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்குகளை விசாரித்துவந்த உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபுவின் பரிந்துரையை ஏற்று, சட்டப்பேரவை தொடர்பான 7 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.
இதற்கிடையே, ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என செம்மலை மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், செம்மலையின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. சட்டப்பேரவை தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் எனவும் இதுதொடர்பான வேறு கோரிக்கைகள் இருந்தால், சென்னை உயர்நீதிமன்றத்தையே நாடலாம் எனவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துவிட்டது.
