வருகிற 24ம் தேதி நடக்கும் துவக்க விழாவில் பிரதமர் மோடி 7 பேருக்கு மானிய விைல ஸ்கூட்டரை வழங்க உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தமது ஆட்சி வந்தால் இலவசங்களுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார். 

வரும் 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை துவங்கி வைக்க உள்ளார்.

விழாவிற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியில், 7 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி மானிய ஸ்கூட்டரை வழங்கி திட்டத்தை துவங்கி வைக்க உள்ளார்.

மேலும் சென்னையை சேர்ந்த 306 பயனாளிகளுக்கும், மீதமுள்ளவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையை தேர்வு செய்து முதற்கட்டமாக 1000 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

ஒரு லட்சம் பயனாளிகளுக்கு மானிய விலை ஸ்கூட்டரை வழங்க போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், நேற்று மாலை மதுரை ஒத்தக்கடையில் நடிகர் கமலஹாசன் தனது கட்சி பொதுக்கூட்டடத்தை நடத்தினார். அங்கு கட்சியின் கொடியை ஏற்றிவைத்து மக்கள் நீதி மய்யம் என்ற பெயரையும் அறிமுகம் செய்தார். 

அந்த கூட்டத்தில் பேசிய போது மக்களிடம் இருந்து இலவசங்களுக்கு உங்கள் ஆட்சியில் வாய்ப்பு உண்டா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தமது ஆட்சியில் நிச்சயம் இலவசங்களுக்கு இடமில்லை. 

செல்வ செழிப்பை உண்டாக்குவேன். நீங்கள் மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கி தரலாம். நோ ஸ்கூட்டர், நோ குவாட்டர். என்று பதிலளித்துள்ளார்.