மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கூட்டம் கடந்த முறை அவர் நடத்திய ஆதரவாளர்கள் பேரணியை போல் பிசுபிசுத்துபோய்விடும் என எதிர்பார்த்திருந்த மு.க.ஸ்டாலின் தரப்பிற்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கலைஞர் மறைவை தொடர்ந்து மு.க.அழகிரி மறுபடியும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த சமயத்தில் மு.க.அழகிரி தரப்பில் முன்வைக்கப்பட்ட டிமாண்டுகள் ஸ்டாலினை வேறுமாதிரி முடிவு எடுக்க வைத்தது. இதனை அடுத்தே கலைஞர் மறைந்ததன் 30வது நாளில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்டி அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நோக்கி பேரணி செல்வது என்று முடிவெடுத்தார் அழகிரி. இதனால் அதிர்ந்து போன ஸ்டாலின் தரப்பு அழகிரியை மறுபடியும் சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால் அப்போது பிடிகொடுக்காமல் அறிவித்தது போல் பேரணி சென்றார் அழகிரி. ஆனால் பேரணி படு தோல்வி என்றே சொல்லலாம். லட்சம் பேர் பேரணியில் பங்கேற்பார்கள் என்று அழகிரி கூறிய நிலையில் வந்ததோ சில ஆயிரம் பேர் தான். இதன் பிறகு அழகிரியே அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். ஸ்டாலினும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திமுக தலைவரானதுடன் கட்சியையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவிற்கு மிகப்பெரியை வெற்றியை தேடிக் கொடுத்தார். இதனால் இனி திமுக என்றால் அது ஸ்டாலின் தான் என்கிற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் திடீரென மதுரையில் இருந்து அழகிரி மறுபடியும் எதிர்ப்புக் குரலோடு ஸ்டாலினுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார். ஆதரவாளர்களுடன் ஆலோசனை என அழகிரி அறிவித்த போது அதனை ஸ்டாலின் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஆலோசனை கூட்டத்தில் கூடிய ஆதரவாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தரப்பை ஜெர்க் ஆக்கியுள்ளது. அதோடு மட்டும் அல்லாமல் கூட்டத்தில் அழகிரி கூறிய சில கருத்துகள் ஸ்டாலின் இமேஜை டேமேஜ் ஆக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து இதே பாணியில் ஸ்டாலினுக்கு எதிராக பேச  அழகிரி தயாராகி வருகிறார்.

தேர்தல் நேரத்தில் குடும்பம் தொடர்பாக அழகிரி கூறுவது நன்றாக எடுபடும் வாய்ப்பு உள்ளது. எனவே அழகிரியை சமாதானம் செய்யவில்லை என்றால் ஸ்டாலின் இமேஜ் தேர்தலுக்கு முன்னதாகவே அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அவரது ஆலோசகர்கள் கருதுகிறார்கள். எண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் அழகிரியால் பானை உடைந்துவிடக்கூடாது என்று சிலர் ஸ்டாலினுக்கு யோசனை தெரிவித்துள்ளனர். அழகிரி உங்கள் அண்ணன் என்பதால் அவர் குடும்பம் தொடர்பாக பேசும் சில பேச்சுகள் மக்கள் மத்தியில் எடுபடும், எனவே அவரை சமாதானம் செய்வது முக்கியம் என்றும் ஸ்டாலினிடம் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

ஆனால் அரசியல் ரீதியாக அழகிரியிடம் பேசாமல் உறவினர்கள் மூலம் பேச ஸ்டாலின் ஓகே சொல்லியிருப்பதாக சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் ஸ்டாலின் – அழகிரி ஆகிய இருவருக்கும் பொதுவான உறவினர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளதாகவும் அவர்கள் மதுரை சென்று அழகிரியை சந்தித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அழகிரி எடுக்கும் முடிவு ஸ்டாலினை மட்டும் அல்ல திமுகவையும் பாதிக்கும் என்பதால் பொறுமை காக்க வேண்டும் என்று உறவினர்கள் எடுத்துக்கூறியதாகவும், தன்னை கட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டு ஸ்டாலின் மட்டும் உயரத்திற்கு வர முயற்சிப்பதை ஏற்க முடியாது என்று அழகிரி தரப்பில் பதில் சொன்னதாக கூறுகிறார்கள்.

முதற்கட்ட பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் உடன்பாடு ஏற்படவில்லை என்றாலும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை படலங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். அந்த வகையில் ஸ்டாலினுடனான மோதலில் மு.க.அழகிரிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது என்றே கூறலாம்.