துக்ளக் பத்திரிக்கையின் விழாவில் கலந்து கொண்ட ரஜினி, மேடையில் பேசிய பேச்சுகள் தி.மு.க. மற்றும் பெரியார் தொண்டர்களை கடும் கடுப்பாக்கி இருக்கிறது. இதில் தி.மு.க.வினர் கூட ஒரு கட்டத்தில் சமாதானமாகிவிட்டனர். ஆனால் பெரியாரிஸ்ட்டுகளோ ரஜினிக்கு எதிராக கொந்தளித்துக் கொடி பிடித்துக் கொண்டிருக்கின்றனர். கொளத்தூர் மணியின் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழகமெங்கும் ரஜினிக்கு எதிராக போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் கொடுத்தது. தந்தை பெரியார் திராவிடர்கழகமோ ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டது. ஆனால் என்ன நடந்தாலும் கவலை இல்லை என்பது போல்.... ரஜினி தன் வீட்டின் முன்னே நின்று ‘மன்னிப்பு கேட்கவும் மாட்டேன், வருத்தம் தெரிவிக்கவும் மாட்டேன். ஏன்னா நான்  உண்மையைதான் பேசினேன்.’ என்று கெத்து காட்டினார். 

இந்த நிலையில் ரஜினிக்கு எதிரான புகார்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன பல இடங்களி. அப்படியானால் பெரியாரிஸ்ட்டுகள் ரஜினியை மன்னித்துவிட்டார்களா? என்று ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு பதில் சொல்லும் அவர்களோ....”தந்தை பெரியாரை உரசிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லிய ரஜினி ‘அது மறுக்க வேண்டிய விஷயமில்லை. மறக்க வேண்டிய விஷயம்’ அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசினார். 
ஆனால் நாங்க அவரோட செயலை மன்னிக்கப்போறதுமில்லை, மறக்கப்போறதுமில்லை. தமிழகம் மட்டுமில்லை தென்னிந்தியாவின் சுயமரியாதை தன்மையின் அடிநாதமே பெரியார்தான். இமயம் போன்ற அவரை இந்த சிறு நாகமான ரஜினி தீண்டிட்டார். இதனால் மலைக்கு எந்த சேதமுமில்லை. ஆனால் ரஜினி இனி வாழ்நாளில் நிம்மதியாய் இருக்க முடியாது. அவரது படங்கள் இனி எப்படி ரிலீஸாகுதுன்னு பார்த்துடுவோம். பாபா பட ரிலீஸின்போது எப்படி பா.ம.க.வினர் ரஜினியை வெச்சு செய்தார்களோ அதேமாதிரி நாங்களும் இனி ரஜினியின் புதுப்படத்தை விரட்டி விரட்டி அடிப்போம். அந்தப் படங்கள் எப்படி ரிலீஸாகுது, ஓடுதுன்னு பார்த்துடலாம். 

பத்தொன்பது வருஷத்துக்கு முன்பு பாபா பட பிரச்னைக்கே பயந்து போயி ’நான் சினிமாவை விட்டு ஒதுங்கிக்கிறேன்’ என்று நடுங்கி, அஞ்சி ஓடியவர் ரஜினி. இப்ப எழுபது வயதாகி, ரொம்பவே வீக்காகிட்டார். சும்மா மேக் - அப் போட்டு, பொம்மை போல அவரை நடிக்க வெச்சு சினிமாவை எடுத்துட்டு இருக்கானுங்க. அவரோட மகள் வயசு பொண்ணுங்களை ஜோடியாக்கி, கவர்ச்சி காட்ட வெச்சு சினிமாவை ஓட்டிட்டு இருக்கிறானுங்க. அதனால ரஜினியின் புதிய படங்கள் இனி ஓடாது, ஓட விடமாட்டோம். முன்னாடி மாதிரி பொட்டி வராது! சாட்டிலைட் மூலமாகதான் படம் ஓடும். பரவாயில்லை, ஸ்கிரீனில்தானே படத்தை போட்டாகணும். பார்த்துக்குறோம். பெரியார் எந்தளவுக்கு விவேகமானவரோ அதுக்கு நிகராக வேகமானவர். அந்த வேகத்தை இனி பார்ப்பார் ரஜினி எங்களிடம். இந்துத்வத்தின் கைக்கூலியாகி செயல்படும் ரஜினிக்கு இனி சினிமா வாழ்க்கையில்  வெற்றியே கிடையாது. நிம்மதியே இல்லாமல் தமிழ்நாட்டை விட்டு அவரை ஓட வைப்போம். சினிமா பொழப்பு நடக்காதுன்னு தெரிஞ்சுட்டா அந்தாளு தமிழ் மண்ணை விட்டு ஓடிடுவார். சத்தியமாக அப்படியொரு நிலையை உருவாக்குவோம்!” என்கின்றனர் ஆவேசம் பொங்க. 
மை காட்!