திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சுடலை என்று கிண்டல் செய்து  மீம்ஸ் வெளியிட்ட சன் டி.விக்கு தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் குழுமம் பிரமாண்டமானது. இது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நம்பகமான துணைவராகவும் இருந்த அவரது மருமகன் முரசொலி மாறனின் புதல்வர்களால் நடத்தப்படுவது சன் குழுமம். திமுகவின் ஊதுகுழலாக இருந்த சன் டி.வி பிற்பாடு தனது நிலைப்பாட்டை வர்த்தக ரீதியாக மாற்றிக்கொண்டாலும் திமுக சார்பானதாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில், சன் டி.வி செய்திகளில் மீம்ஸ் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரலான பதிவுகள் பற்றி செய்தி தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை  சுடலை என்று கிண்டல் செய்து  மீம்ஸ் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், திமுக தொணடர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

எப்போதும், திமுக அரசியல் தலைவர்களிலேயே தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் டுவிட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், இதை அவருக்கு டெக் செய்து பலரும்  ஷேர் செய்து வருகின்றனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த திமுக எம்.பி.செந்தில்குமார் டுவிட்டரில் சன்.டி.விக்கு கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், இது உண்மைதானா சன் டி.வி, உண்மை எனில், இதுபோல் செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது. கழக தொண்டனின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம். இதுபோன்று மலிவு அரசியலில் ஈடுபட வேண்டாம். இனி இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த செயலுக்கு மிகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். இது உண்மை இல்லை என்றால் அது பற்றி விளக்கத்தை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து, இது தொடர்பான புகார் சன்.டிவி நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற பிறகு 4  ஊழியர்களை உடனே பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.