இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றால் தமிழ் , மலையாளம் , கன்னடம் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா? என்பதையும் நடிகை சுஹாசினி விளக்க வேண்டும் என இயக்குனர் அமீர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றால் தமிழ் , மலையாளம் , கன்னடம் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா? என்பதையும் நடிகை சுஹாசினி விளக்க வேண்டும் என இயக்குனர் அமீர் வலியுறுத்தியுள்ளார். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அதனால் நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என சுஹாசினி கூறியிருந்த நிலையில் அமீர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பேசினார். அவரின் இந்த பேச்சு இந்தி பேசாத மாநிலங்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் இது திரைத்துறையிலும் விவாதமாக மாறியுள்ளது. கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்தி ஒன்றும் தேசிய மொழி இல்லை என கூறினார், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தி நடிகர் அஜய் தேவ்கன், ஹிந்தி தேசிய மொழி இல்லை என்றால் எதற்கு கன்னடம் தமிழ் உள்ளிட்ட படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதுடன், ஹிந்தி தான் நாட்டின் தேசிய மொழி, நாட்டின் தாய் மொழியாக இருக்கும் என இந்தியில் பதிவிட்டார்.

அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்த கிச்சா சுதீப் அன்புச் சகோதரரே அது அப்படி அல்ல, நீங்கள் இந்தியில் பதிவிட்டது எனக்கு புரிந்தது, ஹிந்தியை நாங்கள் ஆர்வத்துடன் படிக்கிறோம், ஒருவேளை இதே என் தாய்மொழியான கன்னடத்தில் நான் பதில் அளித்திருந்தால் உங்கள் நிலைமையை எண்ணிப் பார்க்கிறேன், நாங்களும் இந்தியர்கள் தான் என கூறியிருந்தார். இதற்கு ஆதரவு எதிர்ப்பு என தொடர்ந்து விவாதம் நீடித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை சுஹாசினி இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், இந்தி மொழியை நல்ல மொழி அதை நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். அவரின் இந்த கருத்தை பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர் சுஹாசினியின் கருத்துக்கு காட்டமாக பதில் கேள்வி எழுப்பியுள்ளார். அது பின்வருமாறு:-
இந்த உலகமே அன்பால் நிறைந்திருக்கிறது. எந்த மதமாக இருந்தாலும் அது அன்பையே போதிக்கிறது, அன்பிலிருந்துதான் மதங்களே உருவாகி இருக்கிறது. ஆனால் கடவுளின் பெயரால் தான் இப்பொழுது உயிர்ப்பலிகள் நடக்கிறது . ஆனால் எந்த கடவுளும் உயிர்பலி கேட்டதில்லை, ஆனால் இந்த அடிப்படைக் கோட்பாட்டை மறந்து சில மதவாதிகள் ஆகட்டும் அல்லது இந்த மதத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அரசியலாக இருக்கட்டும் இதுதான் ஆபத்தானது. அரசின் பெயரான மதம் அனைத்தையும் பிரித்து விட்டது. ஆனால் மனித நேயம் மட்டுமே அனைத்தையும் ஒன்றிணைக்கிறது. ரமலான் திருநாளான இன்று எனக்கு வந்த வாழ்த்துச்செய்திகள் அலைபேசி அழைப்புகளால் நான் நெகிழ்ந்து போனேன் அதனால் தான் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறேன். என்னை அழைத்து வாழ்த்தியவர்கள் 80 சதவீதம் பேர் இஸ்லாம் அல்லாதவர்கள்தான்.

எப்படி இப்படி வாழ்த்துகிறார்கள் என்றால் அதுதான் மனித நேயம் என்றார். அப்போது சுஹாசினி இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அதனால் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அப்படி என்றால் தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா? தமிழ் , மலையாளம் , கன்னடம் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா என்பதை சுகாசினி விளக்கவேண்டும். இந்த மண்ணில் ஆழமாக ஆரியம் வேறூன்றி வருகிறது. அது மிகவும் ஆபத்தானது, அதுதான் இதுபோன்ற புதிய புதிய கருத்துக்களை கொண்டு வருகிறது. மருத்துவ கல்லூரி ஒன்றில் கூட சமஸ்கிருதம் உறுதிமொழி எடுத்துள்ளனர். இந்த சமஸ்கிருதத்தை எல்லாம் உடைத்து ஒழித்துதான் நாம் தமிழை முன்னிலைப்படுத்தி வந்திருக்கிறோம்.
ஆனால் மீண்டும் இவர்கள் பழைய முறையைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அதனால்தான் ஹிந்தி மொழி நல்ல மொழி, ஹிந்தி மொழி பேசாதவர்கள் நாட்டில் இருக்கக் கூடாது போன்ற வார்த்தைகள் வருகிறது. என் நாட்டில் இருந்து கொண்டு எங்களையே வெளியேற சொல்கிறீர்கள், முதலில் நீங்கள் வெளியேறுங்கள், இந்தி திணிப்பை செய்யும் நீங்கள் என் தேசத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று நான் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
