சொத்துகுவிப்பு வழக்கில் ஏற்கனவே 92 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததால் சுதாகரனை விடுதலை செய்யலாம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சசிகலா உள்பட 3 பேருக்கும் அடுத்த ஆண்டு வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதியுடன் சிறைவாசம் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்ததாலும், அபராத தொகை செலுத்தியதாலும் சசிகலா தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார்.

ஆனால், சிறை விதிகளின்படி அவர் அடுத்த ஆண்டு  ஜனவரி 27-ம் தேதி தான் விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை திட்டவட்டமாக கூறி விட்டது. இந்த நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சுதாகரன் ஏற்கனவே 92 நாட்கள் சிறைவாசம் அனுபவித்திருந்தார். இதன் காரணமாக அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்  முத்துக்குமார், மூர்த்திராவ் கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனு மீதான விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பா முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சிவப்பா நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது சொத்துகுவிப்பு வழக்கில் ஏற்கனவே 92 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததாலும், 89 நாட்களுடன் அவரது தண்டனை காலம் நிறைவு பெற்றிருப்பதாலும், சுதாகரனை விடுதலை செய்ய சிறைத்துறைக்கு உத்தரவிட்டு நீதிபதி சிவப்பா தீர்ப்பு கூறியுள்ளார். அதே நேரத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் விதித்த அபராத தொகையை செலுத்திய பின்பு அவரை விடுதலை செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் சுதாகரனும் ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அந்த அபராத தொகையை செலுத்திய உடனே, அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார். இதனால் அபராத தொகை செலுத்தினால், எந்த நேரத்திலும் சுதாகரன் விடுதலையாக வாய்ப்புள்ளது. இதையடுத்து, அபராத தொகையை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை சுதாகரன் தரப்பினர் எடுத்து வருகின்றனர்.