சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சுதாகரன் சசிகலா, இளவரசிக்கு முன்பாகவே விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வரும் ஜனவரி 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சசிகலா, இளவரசிக்கு முன்பாகவே சுதாகரன் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சுதாகரன் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஏற்கனவே 92 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததால் பிப்ரவரி மாதம் 14-ம் தேதிக்கு முன் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.