வரும் 27ந் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வர உள்ள நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக அவருக்கு ஆதரவாக அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சசிகலாவையும் – எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டு மிகவும் கொச்சையாக இரட்டை அர்த்தத்தில் பேசியிருந்தார். இதற்கு அதிமுக – அமமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் உதயநிதியை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நகரில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உதயநிதிக்கு எதிராக போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த போராட்டத்தை தொடர்ந்து கோகுல இந்திரா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஜெயலலிதாவிற்காக தவ வாழ்வு வாழ்ந்தவர் சசிகலா என்று கூறி செய்தியாளர்களையே அதிர வைத்தார் கோகுல இந்திரா. மேலும் சசிகலாவை விமர்சிப்பதை தங்களால் ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார். அதிமுகவின் அமைப்புச் செயலாளர், செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து கொண்டு சசிகலாவிற்கு ஆதரவாக கோகுல இந்திரா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவை அதிமுகவில் இருந்து முழுவதுமாக ஒதுக்கி வைத்திருக்கின்றனர். அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அதிமுக மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர உள்ள சமயத்தில் கோகுலஇந்திரா அவருக்கு ஆதரவாக பேசியது தமிழக அரசியலிலும் கூட சலசலப்பை ஏற்படுத்தியது. அதுவும் கோகுல இந்திரா கடந்த சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாகவே இருந்து வருகிறார். தலைமை கழகம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கடமைக்கு கலந்து கொண்டு வந்தார். டிவி விவாதங்கள் உள்ளிட்டவற்றிலும் கூட அவ்வபபோது மட்டுமே தலைகாட்டி வந்தார். கோகுல இந்திரா திமுகவிற்கு செல்ல உள்ளதாக கூட தகவல்கள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில் தான் அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கோகுல இந்திரா. இதற்கு முதற்காரணம் அதிமுக தன்னை ஒதுக்குவதாக அவர் நினைப்பது தான் என்கிறார்கள். கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலின் போது பெரம்பூர் தொகுதியில் போட்டியிட கோகுல இந்திரா முயன்றார். இதே போல் தென் மாவட்டங்களிலு ஏதேனும் ஒரு தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்க அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் கோகுல இந்திராவிற்கு அதிமுக வாய்ப்பு வழங்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட கோகுல இந்திரா காய் நகர்த்தினார்.

ஆனால் அந்த தொகுதியை பாமகவிற்கு அதிமுக ஒதுக்கியது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் அண்ணா நகர் தொகுதியில் மறுபடியும் போட்டியிட கோகுல இந்திரா திட்டமிட்டுள்ளார். ஆனால் அந்த தொகுதியில் வேறு ஒரு வேட்பாளரை அதிமுக நிறுத்த உள்ளதாக சொல்கிறார்கள். இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் தான் தற்போதே சசிகலா வந்த பிறகு அவருடன் இணைந்து கொள்ள கோகுல இந்திரா துண்டை போட்டு வைத்துள்ளதாக சொல்கிறார்கள். கோகுல இந்திரா திமுகவிற்கு வர விரும்பினாலும் சென்னையில் அவரால் அரசியல் செய்ய முடியாது, சிவகங்கையிலும் கூட பெரிய கருப்பனுக்கு ஈடு கொடுக்க முடியாது. எனவே சசிகலா தான் தனது அரசியல் எதிர்காலத்திற்கு சரியான ஆள் என்று கருதி அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.