Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரியில் திடீர் சிக்கல்.. பாஜகவினர் நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்.. தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!

புதுச்சேரியில் திடீர் சிக்கல்... பாஜகவினர் நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்.. தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!
 

Sudden problem in Puducherry .. BJP nominees issue.. case filed in High Court..!
Author
Puducherry, First Published May 19, 2021, 9:56 PM IST

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளைக் கைப்பற்றியது. கூட்டணி கட்சியான பாஜக 6 தொகுதிகளில் வென்றது. திமுக 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 6 தொகுதிகளிலும் வென்றன. என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி சார்பில் ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றார். இந்நிலையில் ஒரு சுயேட்சை உறுப்பினர் பாஜகவில் இணைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கும் முன்பே பாஜகவைச் சேர்ந்த கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய  பாஜக அரசு நியமித்தது.

 Sudden problem in Puducherry .. BJP nominees issue.. case filed in High Court..!
இது என்.ஆர். காங்கிரஸுக்கு இணையாக உறுப்பினர் பலத்தை பெருக்கிக் கொள்ளவும், பிறகு புதுச்சேரியில் ஆட்சியை அமைக்கவும் பாஜக முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அவர்  தன்னுடைய மனுவில், “அமைச்சரவையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும் பதவி ஏற்காத நிலையில், 3 நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்க எந்த அவசரமும் இல்லை. பதவியேற்கும் முன்பே இந்த மூன்று எம்எல்ஏக்களும் தலைமைச் செயலாளர் மற்றும் துணைநிலை ஆளுநருடன் கூட்டங்களை நடத்துகிறார்கள். சட்டப்படி பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளது மோசமானது.

Sudden problem in Puducherry .. BJP nominees issue.. case filed in High Court..!
அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்எல்ஏக்களை நியமிப்பது தொடர்பாக, மாநில அமைச்சரவை துணைநிலை ஆளுநருக்குப் பரிந்துரையை வழங்கும். அந்தப் பரிந்துரையை ஏற்று ஆளுநர் அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார். பின்னரே நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படாமல், 3 நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த உத்தரவைச் செல்லாது என அறிவித்து அதற்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios