பெரியார் குறித்த சர்ச்சைப்பேச்சுக்கு நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் சார்பாக வழக்காட தயாராக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

பெரியார் குறித்த தனது தனது பேச்சுக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த்,  ’’1971-இல் சேலத்தில் நடந்த ஊர்வலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியையே நான் குறிப்பிட்டேன். ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்துவரப்பரட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். எனவே 1971-இல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல ஆனால் மறக்க வேண்டிய சம்பவம்’’என்றார். 

இதற்கு பதிலளித்துள்ள கி.வீரமணி, ’’மன்னிப்பு கேட்பதும், வருத்தம் சொல்வதும், மனித பண்புக்கு அடையாளம். நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி நடப்பார் என்பதற்கு இதுவே முன்னோட்டம். அவர் நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்’’எனத் தெரிவித்து இருந்தார்.  

இந்நிலையில், கீ.வீரமணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மூத்த தலைவரும், எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி, ‘’ரஜினியின் பெரியார் குறித்த கருத்துக்கான வழக்கில் ரஜினி விரும்பினால் வாதாடத் தயார். 1971 பேரணியின்போது ராமர், சீதை உருவச்சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டன’’ என ரஜினிக்கு ஆதரவாக களத்தில் குதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.