21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டியைக் கொண்டு வந்ததுதான் என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ‘இந்தியா-2030’க்குள் ஒரு பொருளாதார வல்லரசு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணியன் சுவாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.  “பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக்கு பிறகு பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8 சதவீதம் என்ற அளவில் இருந்தபோதும், இந்தியாவில் சீர்திருத்தங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தியாவில் தேவைப் பற்றாக்குறை தொடர்ந்து இருந்துவருகிறது. மக்கள் கையில் செலவு செய்ய பணம் இல்லாமல் உள்ளனர்.


அடுத்த 10 ஆண்டுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இந்தியா 2030-ல் பொருளாதாரத்தில் வல்லரசாக முடியும். ஆனால். தற்போதுள்ள வளர்ச்சி தொடர்ந்தால், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு இன்னும் 50 ஆண்டுகள் கழித்துதான் நம்மால் சவால் கொடுக்க முடியும். வருமானவரி மூலம் முதலீட்டாளர்களை  நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது. 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் எது என்றால், ஜிஎஸ்டியைக் கொண்டு வந்ததுதான். இந்த வரி விதிப்பில் நிறைய குழப்பங்கள் உள்ளன.” என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.