subramaniyan swamy always againt tamil people
மக்களால் நிராகரிக்கப்பட்ட பலர், மக்கள் ஆதரவை பெறுவதற்கு என்ன வழி என்று யோசித்து செயல்பட்டால் அது ஒரு பாசிட்டிவ் அணுகுமுறை.
அதைவிட்டுவிட்டு பழிவாங்க முற்பட்டால் அது நெகட்டிவ் அணுகுமுறை.
சுப்ரமணியன் சாமியை பொறுத்தவரை, அவர் இரண்டாவது அணுகுமுறையை கையில் எடுத்துக் கொண்டு மேலும், மேலும் தமிழ் மக்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டிருக்கிறார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானை பூர்வீகமாகக் கொண்ட சுப்பிரமணியன் சாமி, உலக அளவில் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர். சிறந்த வழக்கறிஞர். தேசிய அளவில் செல்வாக்கு பெற்றவர்.
ஆனால், அவர் தமிழகத்தில் ஒரு ஊராட்சி மன்றத்தில் கூட வெற்றிபெற முடியாத அளவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாதவர்.
இதையே, அவர் கொஞ்சம் மாற்றி யோசித்திருந்தால், தமக்குள்ள சர்வதேச, தேசிய அளவிலான செல்வாக்கை பயன்படுத்தி, தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக உருவாகி இருக்கலாம்.

ஆனால், அவர் அப்படி செய்யாமல், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சிந்தித்தும், செயல்பட்டும் நாளுக்குநாள் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.
இலங்கை தமிழர் பிரச்சினையில், அவர் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே இன்று வரை கடைப்பிடித்து வருகிறார். குறைந்த பட்சம் கருத்து சொல்வதியாவது தவிர்த்திருக்கலாம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டத்திற்கு ஒட்டு மொத்த தமிழகமே, ஆதரவு தெரிவித்த நிலையில், அவர் அதற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தார்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பலரை, அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் "பொறுக்கிகள்" என்று கூட விமர்சித்தார். நடிகர் கமலையும் அவர் கடுமையான வார்த்தைகளால் கண்டித்திருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஒட்டு மொத்த தமிழகமே, சசிகலா முதல்வர் ஆகக் கூடாது என்று எதிர்த்த போது, சசிகலாவை முதல்வர் ஆக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
தற்போது, லைக்கா நிறுவனம் இலங்கை தமிழர்களுக்காக, கட்டியுள்ள வீடுகளை வழங்க ரஜினி காந்த், இலங்கை செல்லக்கூடாது என்று வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்தினார்.

அதை ஏற்று, ரஜினியும் தமது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். மேலும் இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் நாசுக்காக ஒதுங்கி கொண்டார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் கண்டிப்பாக இலங்கை சென்று தமிழர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் சுப்பிரமணியன் சாமி.
இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், ‘எதிர்ப்பை மீறி ரஜினிகாந்த் இலங்கை சென்றால் பாராட்டலாம்’ என்றும் சுப்பிரமணியன் சாமி கூறி உள்ளார்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக அவர் மேற்கொள்ளும் ஒன்றிரண்டு முயற்சிகள் பலன் அளித்தாலும், அவருடைய முயற்சிகள் பலவும் தோல்வியிலேயே முடிகின்றன.
ஆனாலும், அவர் தொடர்ந்து தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக, கருத்து கூறுவதையும், செயல்படுவதையும் நிறுத்துவதே இல்லை.
தமிழ் நாட்டில் பிறந்த அவருக்கு தமிழ் மக்களின் மேல் அப்படி என்ன தீராத கோபம் என்று தெரியவில்லை? சுப்பிரமணியன் சாமிதான் அதற்கான பதிலையும் கூறவேண்டும்.
