சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. ஆனால், சந்தையில் ஏறும் போது அதற்கு தகுந்தாற்போல் விலைகள் ஏறும். அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும், பெட்ரோல் டீசல் விலையும் குறைய வேண்டும். ஆனால், இந்தியாவில் விதிக்கப்படும் அதிகப்படியான வரிகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் பலனை மக்கள் அனுபவிக்க முடியவில்லை.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து, பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90 என்பது இந்திய மக்களிடம் இருந்து மத்திய அரசு செய்யும் மிகப்பெரிய சுரண்டல். சுத்திகரிக்கப்படும் முன் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.30. அனைத்து வரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் கமிஷன் என 60 ரூபாய் சேர்கிறது. என்னை பொறுத்தவரை, பெட்ரோல் விலை அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கு விற்கப்பட வேண்டும்”என்று குறிப்பிட்டுள்ளளார்.