தமிழக மக்களுக்கு காவிரி நீர்தான் வேண்டுமென்றால் அழுது புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு, கடந்த 29 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் வரையில் அமைதி காத்துவிட்டு, ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு நாடியுள்ளது.

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 5 ஆம் தேதி அன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக செய்தியாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்தார். 

இந்த நிலையில், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக மக்களுக்கு தண்ணீர் வேண்டுமென்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார் என்று கூறியுள்ளார். 

இது குறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழக மக்களுக்கு தண்ணீர் வேண்டுமென்றால், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று பதிவிட்டுள்ளார்.