கமலை கயவன் என்றும்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஊளையிடுபவர் என்றும் மிக கடுமையாக தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தி குறித்து கருத்து பதிவிட்டிருந்தார். அதில், இந்தியாவில் பல மொழிகள் இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால், இந்தியாவை அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை. அதிகம் பேரால் பேசப்படுவதால் இந்தி நாட்டின் பொது மொழியாக இருக்க வேண்டும். ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். இந்தி மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

அவரது இந்த கருத்துக்கு மு.க.ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்டோர் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார். மு.க.ஸ்டாலின் ஓடிபடி மேலே சென்று மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தும் என அறிவித்துள்ளார். 

மேலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டுக்கொடுத்ததால் உருவானதுதான் இந்தியா. ஆனால் அந்த ராஜாக்கள் தங்கள் மொழியையோ கலாச்சாரத்தையோ ஒருபோதும் விட்டுக்கொடுக்க முன்வந்ததில்லை’என்பதை இந்தி மொழியைத் திணிக்க விரும்பும் அமித் ஷாக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும், இந்தியை திணிக்க முயற்சிப்பதன் மூலம் தேன்கூட்டில் கைவைத்திருக்கிறார். அமித்ஷா குளவிகள் கொட்ட ஆரம்பித்துவிட்டன எனவும் வைகோ கூறினார்.

 

இந்நிலையில், கமலும், மு.க. ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இந்தி எதிர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவரான சுப்பிரமண்ய சுவாமி டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், கயவன் கமல் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் இந்தித் திணிப்பு என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தி கற்பிக்க கூடாது என்று அவர்கள் திணிப்பதை என்னவென்று சொல்வது? முதலில் இந்தியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் கொடுக்கலாம். எதைத் தேர்வு செய்து கொள்வது என்பது மாணவர்களின் முடிவாக இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.