பனங்காட்டு மக்கள் படையின் மாஜி தலைவருக்கு மகளே வைத்த ‘வீடியோ’ ஆப்பு: என்னதான் சொல்லுது சுபாஷ் பண்ணையார் தரப்பு?
சமூக வலைதளங்களில் இதை பரப்பிய எதிர்கோஷ்டியை பார்த்துக் கருவினர் பண்ணையாரின் ஆட்கள். இந்த நிலையில், பண்ணையாரின் மேல் இந்த வீடியோ விவகாரத்தை மையமாக வைத்து வழக்கே போட்டுவிட்டது போலீஸ்.
தீப்பிடிக்கும் திரைக்கதையோடு கூடிய ஒரு திரைப்படத்துக்கான எல்லா பகீர் அம்சங்களும் கொண்ட வரலாறுதான் வெங்கடேச பண்ணையாரின் வாழ்க்கை. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இந்த மனிதர் ஒரு காலத்தில் தமிழக போலீஸுக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததும், இவருக்கு பின்னால் பெரும் மர்மங்கள் நிறைந்திருந்ததும், ஒரு என்கவுன்ட்டரில் இவர் கொல்லப்பட்டதும், இவர் மனைவி ராதிகாசெல்வி பின்னாளில் தி.மு.க.வின் எம்.பி.யானதும், ராதிகாவின் உதவியாளர் பாபு மிக கொடூரமாக கொல்லப்பட்டதும்....என ஏகப்பட்ட திகில் திருப்பங்கள் நிறைந்த நிஜ கதைகள் ஆயிரம் உண்டு.
இப்பேர்ப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் சகோதரர்தான் சுபாஷ் பண்ணையார். வெங்கடேச பண்ணையாரை சுற்றி இருந்த மர்மங்கள், புதிர்களில் முக்கால்வாசி இவரையும் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன.
கூடவே ஏகப்பட்ட வழக்குகளில் உள்ள நபர்களால் இவரது உயிருக்கு அச்சுறுத்தலும் உள்ளது.
தென் மாவட்டத்தினை ஒரு காலத்தில் கலக்கி வந்த பசுபதி பாண்டியனுக்கும் இவருக்கும் தீரா பகை. பசுபதி பாண்டியன், தேசிய நெடுஞ்சாலையில் மிக குரூரமாக கொல்லப்பட்டார். அந்த மரணத்துக்குப் பின் பண்ணையாருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மிக அதிகமாகி உள்ளன. எப்போது? எங்கிருந்து கத்திகள் பாயும் என தெரியாத நிலை.
பண்ணையாரை வைத்து அரசியல் பஞ்சாயத்துகளும் குறையே இல்லை. தென்காசி தொகுதியில் போட்டியிட்ட சரத்குமாருக்கும் எதிராக வேலை செய்தார், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வேலை செய்தார், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழிசைக்கு எதிராக வேலை செய்தார்!... என்று இவர் மீது அரசியல் புகார் பட்டியலும் பெரிது.
இந்த வெங்கடேச பண்ணையாரும், ராக்கெட் ராஜாவும் (சிவா இயக்கிய ‘சிறுத்தை’ படத்தில், திருடன் கார்த்திக்கு இந்த பெயர் வைக்கப்பட்டு, பஞ்சாயத்து ஆச்சே! அதே ராக்கெட் ராஜாதான்) இணைந்து ‘பனங்காட்டு மக்கள் படை’ எனும் கட்சியை துவக்கினர். ஆனால் பிறகு ரெண்டு பேருக்கும் இடையில் பிரச்னையாகிட, சுபாஷ் பண்ணையாரோ பிரிந்து வந்து ‘பனங்காட்டு மக்கள் கழகம்!’ எனும் கட்சியை துவக்கினார். இந்த பண்ணையார், தூத்துக்குடி மாவட்டம் சிவத்தையாபுரத்தை சேர்ந்த ஜெயலிங்க தங்கம் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்றுமாக இரண்டு குழந்தைகள்.இதில், வளர்ந்த மகள் தன் அப்பாவான சுபாஷ் பண்ணையார் பற்றி சமீபத்தில் தானே பேசி வெளியிட்ட ஒரு வீடியோ பெரும் பரபரப்பானது. அதில், தனது அப்பாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது! என்று துவங்கி, வெச்சு வெளுத்திருந்தார் தன் அப்பாவை.
மிக பயந்த நிலையில், பம்மிய குரலில் அந்த பெண் பிள்ளை பேசியது தமிழக முழுக்க வைரலானது. சுபாஷ் பண்ணையார் மீது பிரமிப்பு மற்றும் பயம் வைத்திருந்தவர்கள் இதன் பின் அவரை சீண்டி பேச துவங்கினர். மேலும், பண்ணையாருக்கு எதிரான தரப்போ இந்த வீடியோவை லட்சக்கணக்கில் ஃபார்வேர்டு செய்தது. இதில் சுபாஷ் பண்ணையாரின் தரப்புக் கொதித்துப் போனது. ’தன் மகளை மன்னித்துவிடுவார் பண்ணையார்! ஆனால், இந்த வீடியோவை பரப்பும் எதிரிகள் கூடாரத்தில் சில இழவுகள் விழுவது உறுதி.’ என்று சமூக வலைதளங்களில் இதை பரப்பிய எதிர்கோஷ்டியை பார்த்துக் கருவினர் பண்ணையாரின் ஆட்கள். இந்த நிலையில், பண்ணையாரின் மேல் இந்த வீடியோ விவகாரத்தை மையமாக வைத்து வழக்கே போட்டுவிட்டது போலீஸ்.
சரி, இந்த வீடியோ பஞ்சாயத்து பற்றி சுபாஷ் பண்ணையாரின் தரப்பு என்னதான் பதில் சொல்கிறது? பனங்காட்டு மக்கள் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளரான ஓடை செல்வம் “பண்ணையார் குடும்பத்துல எந்த பிரச்னையும் இல்லண்ணே. அவர் மனைவி லேசா மனநிலை பாதிக்கப்பட்டு இருக்காவ. அவுகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்றது, தன் குழந்தைகளை பத்திரமா பாத்துக்கிறதுன்னு பண்ணையாரு ரொம்ப பொறுப்பான ஆளா இருக்காவ. ஆனாலும் அவுக மனைவிதான் அப்பப்ப ஏதாச்சும் புருஷன் மேலே பிரச்னையை சொல்லி, சிக்கலை இழுத்துடுறாவ. பண்ணையாருக்கு தன்னோட பிள்ளைகளைப் பற்றி பெரிய கவலை. ஆனா அவரு பிள்ளையையே அவருக்கு எதிராக பேச வைத்து இப்படி பண்ணையாரோட மரியாதையை சிலர் உரசிப்பார்க்க நினைச்சது ரொம்பப் பெரிய சேட்டைண்ணே!” என்றிருக்கிறார்.
சர்தாம்ணே!
-விஷ்ணுப்ரியா